முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாதுவில் அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு கர்நாடக மாநில அரசுக்கு அளித்துள்ள அனுமதியை திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ரூ.5912 கோடி நிதி ...

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் இரு தடுப்பணைகள் கட்டி, நீர்மின் நிலையம் துவக்க கர்நாடக அரசு திட்டமிட்டு ரூ.5912 கோடி நிதி ஒதுக்கியது. மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்கள் நீர்வரத்து இன்றி, விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடும் என்று கருதுவதால், மேகதாது அணைத் திட்டத்திற்கு, தமிழக அரசும், விவசாயிகளும் தொடர்ந்து கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

தமிழக அரசு இது தொடர்பாக சுப்ரீ்ம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. எனினும், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முதற்கட்ட வரைவு அறிக்கையை தயார் செய்தது. இதற்காக மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டது.

நீர் வள ஆணையம்...

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவின் மேகதாது பகுதியில் குடிநீர் பயன்பாட்டுக்கு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவின் காவிரி நீராவரி நிகாம் என்ற அமைப்புக்கு கடந்த நவம்பர் மாதம் மத்திய நீர் வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த அணை கட்டுவதற்காக விரிவான அறிக்கை தயாரிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகளை நிறுத்துமாறு மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தக் கோரி கடந்த 4.9.2018 அன்று நான் கடிதம் எழுதினேன்.

உத்தரவுக்கு எதிரானது...

மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற தொடர்புள்ள மாநிலங்களின் ஒப்புதலின்றி காவிரி ஆற்றில் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அதில் கூறியிருந்தேன். கடந்த 8.10.2018 அன்று தங்களிடம் அளிக்கப்பட்ட குறிப்பாணையிலும் அதனை வலியுறுத்தியிருந்தேன். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தயாரித்திருக்கும் செயலாக்க அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஏற்கெனவே கூறியிருந்தேன். செயலாக்க அறிக்கையில் உள்ளபடி அந்த அணையானது குடிநீர் திட்டத்திற்கானது மட்டுமல்ல, கர்நாடகாவில் காவிரி பாசன பரப்பை அதிகரிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும்...

தமிழக அரசின் நேர்மையான, நியாயமான இந்தக் கருத்துகளை ஆலோசிக்காமல், மத்திய நீர்வள ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவுத் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. மத்திய நீர் வள ஆணையத்தின் இந்த நடவடிக்கையால், காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இது தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெற மத்திய நீர்வள ஆனையம் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து