முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவகால புலம் பெயர்தலில் திருமங்கலம் பகுதி கண்மாய்களை தவிர்த்த கரண்டிவாயன்,கூழைக்கடா பறவைகள்: பறவையியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி:

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- பருவகால புலம் பெயர்தல் நிகழ்வின் போது திருமங்கலம் பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு வழக்கம் போல் வருகை தரும் கரண்டிவாயன்,கூழைக்கடா உள்ளிட்ட சில பறவை இனங்கள் இந்த ஆண்டு வராமல் போனது பறவையியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
குளிர்காலத்தில் பூமியின் வடபகுதியில் உள்ள நீர்நிலைகள் பனியால் உறைந்து விடும்.இதனால் அங்கு மீன்,பூச்சி,பழங்கள் போன்ற உணவுப் பொருட்கள் பறவைகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.இதையடுத்து காடுகள்,சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளைச் சார்ந்து வாழ்ந்திடும் பறவைகள் அனைத்தும் குளிர்காலத்தில் மிதவெப்பம் கொண்ட பகுதிகளுக்கு இடம் பெயர்வதை வழக்கமாக கொண்டுள்ளன.அதன்படி அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் அதிகளவு வெளிநாட்டு பறவைகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து வருவது வழக்கம்.நவம்பர் மாதமான தற்போது திருமங்கலம் பகுதியில் உள்ள நேசநேரி,சிவரக்கோட்டை,கள்ளிக்குடி,உரப்பனூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கியுள்ளன.
அதிலும் குறிப்பாக திருமங்கலம் அருகேயுள் நேசநேரி கண்மாய் பருவகாலத்தில் புலம் பெயர்ந்து வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு மிகவும் ஏற்ற இடமாகத் திகழ்கிறது.இதற்கு காரணம் தண்ணீர் நிறைந்த கண்மாய்,கூடுகள்கட்ட ஏதுவாக திகழும் மரங்கள்,போதிய உணவுகள் கிடைப்பது,பாதுகாப்பான சுற்றுச்சூழல் போன்ற இயற்கை அம்சங்கள் நிறைந்து இருப்பது தான்.ஒவ்வொரு ஆண்டும் நேசநேரி கண்மாய்க்கு வந்திடும் வெளிநாட்டு பறவைகளை படமெடுத்திடவும்,ஆய்வுகள் மேற்கொள்ளவும் பறவையியல் ஆர்வலர்கள் முகாமிடுவார்கள்.இதனிடையே பறவைகளில் மிகப்பெரியதாகவும்,அழிந்து வரும் பறவையினங்களில் ஒன்றுமான பெலிக்கன் எனப்படும் கூழைக்கடா பறவை நேசநேரிபகுதியில் உள்ள புளிய மரங்கள் மற்றும் பனைமரங்களில் குச்சிகளால் கூடுகட்டி 2முதல்3 முட்டையிட்டு 21 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரித்து வந்தன.
அதே போல் அழியும் நிலையிலுள்ள மற்றொரு வகை பறவையினமான கரண்டிவாயன் எனப்படும் துடுப்பு நாரை நேசநேரி கண்மாய் பகுதிக்கு டிசம்பர் மாதத்தில் புலம் பெயர்ந்து வந்து 5மீட்டர் உயரத்திலுள்ள மரக்கிளைகளில் குச்சிகளால் கூடுகட்டி 4முட்டைகள் வரை இட்டு அடைகாத்து குஞ்சு பொறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.இதே போன்று ஏராளமான அரிய வகை பறவை இனங்களும் நேசநேரி கண்மாய் பகுதியில் முகாமிட்டு இனப்பெருக்கம் செய்து வருகின்றன.இந்நிலையில் பறவையியல் ஆர்வலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பெலிக்கன் எனப்படும் கூழைக்கடாவும்,கரண்டிவாயன் என்று அழைக்கப்படும் துடுப்பு நாரையும் திருமங்கலம் பகுதியிலுள்ள நேசநேரி உள்ளிட்ட கண்மாய்களுக்கு முற்றிலும் வராமல் போய்விட்டது.
புலம் பெயர்தலில் முக்கிய அங்கம் வகித்திடும் இவ்விரு பறவைகளும் திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு வருவதை தவிர்திருப்பது பறவையியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.வழக்கம் போல் வருகை தந்து இனப்பெருக்கம் செய்து திரும்பிச் சென்றிடும் இவ்விரு பறவைகளும் திருமங்கலம் பகுதிக்கு வராமல் சென்றிருப்பது இயற்கை சூழலில் ஏற்பட்டு மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.எனினும் புலம் பெயர்தல் நிகழ்வு இன்னும் முழுமையடையாத நிலையில் கூழைக்கடாவும்,கரண்டிவாயனும் நேசநேரிக்கு வந்திடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பறவையியல் ஆர்வலர்கள் கேமராவில் கண்ணை வைத்து காத்துக் கிடக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து