முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி அழகுநாச்சியம்மன் கோவிலில் கோபுர கலசம் திருட்டு

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- பழனி அழகுநாச்சியம்மன் கோவிலில் கோபுர கலசத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் முருகனுக்கு நான்கு கிரிவீதிகளிலும் வனதுர்க்கை, வீரதுர்க்கை, அழகுநாச்சியம்மன், மகிசாசுரவர்த்தினி ஆகிய 4 பெண் தெய்வங்கள் காவல் தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். இதில் கிழக்கு கிரிவீதியில்  அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வருடாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்றுமுன்தினம் இரவு ராக்கால பூஜைகள் முடிந்தபின்னர் கோவில் நடையை அடைத்து விட்டு அர்ச்சகர்கள் சென்று விட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தின் அருகே காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்த மர்ம நபர்கள் கோபுர கலசத்தைத் திருடிச் சென்று விட்டனர். நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர்கள் கோபுர கலசம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் இணை ஆணையருக்கும், அடிவாரம் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கோவிலுக்குள் கண்காணிப்பு கேமரா உள்ள நிலையில் கோபுர கலசம் பொருத்தப்பட்டிருந்ததை கண்காணிக்க கேமரா இல்லை. எனவே அப்பகுதியில் ஏதேனும் கேமராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபுர கலசம் கொள்ளை போனதையடுத்து மாற்று கலசம் பொருத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து வருடாபிஷேக விழாவும் நடைபெற்றது. பழனி அழகுநாச்சியம்மன் கோவிலில் கோபுர கலசம் திருடு போனதையடுத்து மற்ற  உபகோவில்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து