முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது- டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாகவே தமிழகம் மாற்றி வருகிறது என்று டெல்லியில் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
 
4-வது முறையாக...

டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை நடத்திய  9-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பெற்றமைக்கான விருதினை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மத்திய இணை அமைச்சர்கள் அஷ்வின் குமார் சௌபே மற்றும் அனுபிரியா பட்டேல் ஆகியோர் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கினர். இவ்விருது தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தொடர்ந்து 4-வது முறையாக வழங்கப்படுவது மிகவும் பெருமைக்குரிய செயலாகும்.

6886 உறுப்புகள்...

இந்த விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது, 9-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் தமிழக அரசு உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தொடர்ந்து 4-வது முறையாக இவ்விருதினை பெறுவதில் பெருமையடைகிறேன். அம்மாவை தலைவராகக் கொண்டு 12.12.2014-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல், அறிவியல் ரீதியாகவும் செம்மையாக செயல்படுவதின் அடையாளமாக இதுவரை தமிழகத்தில் 1198 கொடையாளர்களிடமிருந்து 6886 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.  இந்த எண்ணிக்கை மூலம் உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களை விஞ்சி நிற்கிறது.

மக்களுக்கு இலவசமாக...

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக செய்யப்படுகிறது. இச்சிகிச்சைகளுக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகபட்சமாக ரூ.35 லட்சம் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் மான் கி பாத் வானொலி உரையில் கூறியதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் தலைசிறந்து முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை பின்பற்றக் கூடிய வகையிலும் செயல்படுகிறது என்றும் கூறினார்.
 
முதன்முறையாக...

2015-ம் ஆண்டு மின்சார விபத்தினால் இரு கைகளையும் இழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு 07.02.2018 அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 மணி நேரம் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறை மருத்துவக் குழுவினர் மூளைச்சாவு அடைந்தவரின் குடும்பத்தினர் தானமாக கொடுத்த கைகளைப் பெற்று, கைகள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர். இது இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் உலக சாதனை

24.10.2018 அன்று சென்னையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் சார்பில் உடல் உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 4000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் 80 நிமிட தொடர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 16.09.2018 அன்று சென்னை பெசன்ட் நகரில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட உடல் உறுப்பு தானம் குறித்த மாபெரும்  விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதுபோன்ற செயல்பாடுகளால் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.  இதன்மூலம் உடல் உறுப்பு தானத்தை  மக்கள் இயக்கமாகவே தமிழகம் மாற்றி வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இவ்விழாவில் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பிரீத்தி சுடான், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை கூடுதல் செயலாளர் நாகராஜன், நோட்டோ இயக்குநர்  வசந்தி ரமேஷ், டிரான்ஸ்டான் உறுப்பினர் செயலர் காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து