முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதித்த மாவட்டங்களுக்கு எடுத்து செல்லும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் இல்லை - ரயில்வே துறை

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

10-ம் தேதி வரை..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில்களில் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் ரயில்வே பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் கடிதம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர். ரயில்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்குமாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
கட்டணம் வசூலிக்க கூடாது

இந்நிலையில், அனைத்து ரயில்வே மேலாளர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், தற்போதைய நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொருட்களை அனுப்பும்போது சரக்கு கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து அரசு அமைப்புகளும் நிவாரணப் பொருட்களை அனுப்பலாம். மற்ற அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து ரயில்வே கோட்ட மேலாளர்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சரக்குகளை அனுப்புவோரும் பெறுவோரும் மாவட்ட கலெக்டர் அல்லது உள்ளாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே விளக்கம்

மேலும் தமிழகத்தை நோக்கி செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது குறித்து கோட்ட மேலாளர்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில்களில் உள்ள வழக்கமான சரக்குப் பெட்டிகளுக்குப் பதிலாக, தனி பெட்டிகளில் அனுப்புவது சிறந்தது என்று ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவு, வரும் 10-ம் தேதிவரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

விமானத்தில் கட்டணம்...

இதற்கிடையே, ஏர் இந்தியா விமானத்தில் நிவாரணப் பொருட்களை கொண்டு வர சரக்கு கட்டணம் இல்லை என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுரேஷ் பிரபு, தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏர் இந்தியா விமானத்தில் எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்தவர்கள் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நினைத்தால், தமிழ்நாடு அரசு இல்லத்தை அணுகுமாறு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கேட்டுக்கொண்டுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் சுரேஷ்பிரபு, தமிழகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை அனைவரும் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து