பிரித்வி ஷாவுக்கு பதிலாக யார்? 3 வீரர்களை பரிசீலிக்கிறது பி.சி.சி.ஐ

சனிக்கிழமை, 1 டிசம்பர் 2018      விளையாட்டு
BCCI 2018 10 02

சிட்னி : முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷாவுக்கு பதிலாக யாரை தொடக்கவீரராக களமிறக்கலாம் என்று பி.சி.சி.ஐ. தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.பிரித்வி ஷா இடத்திற்காக மூன்று வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் டிரா...

சிட்னியில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் பிரித்வி ஷா அரைசதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய லெவன் அணியின் பேட்டிங்கின்போது, பவுண்டரி எல்லைக் கோட்டிற்கு அருகே பிரித்வி ஷா பீல்டிங் செய்தார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பிரையாண்ட் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

முரளி விஜய்க்கு...

பிரித்வி ஷா, காயம் காரணமாக அடிலெய்டில் வரும் 6-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார். அவர் விளையாடாத நிலையில், தொடக்க வீரராக யாரைக் களமிறக்குவது என்று இந்திய அணியின் தேர்வுக்குழு குழப்பத்தில் இருக்கிறது. இதற்கான போட்டியில் மூன்று முக்கிய வீரர்கள் உள்ளனர். இந்திய டெஸ்ட் அணியின் தொடக்கவீரர் என்றாலே மூத்த வீரரான முரளி விஜய்-க்கு தான் முதல் வாய்ப்பு கிடைக்கும். அவருக்கான வாய்ப்பு விராட் கோலியின் கையில் இருக்கிறது. 2018-ம் ஆண்டில் முரளி விஜய் மிகப்பெரிய சாதனை எதுவும் செய்துவிடவில்லை. 11 இன்னிங்சில் விளையாடி 233 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 105 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவர் நீக்கப்பட்டு பிரித்வி ஷா சேர்க்கப்பட்டார். தற்போது அணியில் இடம் கொடுத்தால் அவருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

2-வது வாய்ப்பு புஜாரா

இந்திய டெஸ்ட் அணியின் 3-ம் வீரராக இறங்கும் புஜாரா, தொடக்க வீரராக களமிறக்கப்பட்டால், முரளி விஜய் வெளியே உட்கார வைக்கப்படுவார். ஏற்கனவே, 6 போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கி 348 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 116. கடைசியாக, 2015-ம் ஆண்டு நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கவீரராக இறங்கினார்.

ரோஹித் சர்மாவுக்கு ...

முன்னாள் கேப்டன் தோனியால், ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டவர் ரோஹித் சர்மா. சுமார் 6 ஆண்டுகளாக அந்த இடத்தை கெட்டியாகப் பிடித்துகொண்டார். அதில், 3 முறை இரட்டை சதம் அடித்தும் அசத்தியிருக்கிறார். டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை, மாறி மாறி களமிறக்கப்பட்டு வருகிறார். ஆனால், அவருக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. மேலே சொன்ன இந்த 3 வீரர்களைத் தவர, இளம் வீரர் மயங் அகர்வாலும் டெஸ்ட் வாய்ப்பிற்காக வெளியே காத்திருக்கிறார். இதனால், யாரை தொடக்க வீரராக இறக்குவது என்பதில் தேர்வுக்குழு குழப்பத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து