முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு மனிதநேயத்துடன் உதவிய அமைச்சர் டாக்டர் மணிகண்டன்

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மனிதநேயத்துடன் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
   ராமநாதபுரம் மாவட்டம் கீழசெல்வனூர் பகுதியை சேர்ந்தவர் ஏசு என்பவரின் மகன் வினோத்பாபு(வயது29). மாற்றுத்திறனாளியான இவர் இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவகல்லூரியில் சேர்ந்து வறுமை காரணமாக 2-ம் ஆண்டு பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார்.இதன்பின்னர் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்த வினோத்பாபுவிற்கு கிரிக்கெட் மீது இருந்த மோகத்தின் காரணமாக மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட தொடங்கினார். இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு பல போட்டிகளில் விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிதந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக நியூசிலாந்தில் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ள ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள வினோத்பாபு அதற்கான பயிற்சி மேற்கொள்ள வசதி இன்றி தவித்து வருகிறார். மேலும், குடும்ப வறுமை காரணமாக தனது மனைவி சுதா மற்றும் மகன்கள் பெஞ்சமின், எபினேசர் ஆகியோருடன் மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் தனக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்துதரக்கோரியும், ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாட தேவையான பயிற்சி உபகரணங்கள் வாங்க நிதி உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்து வந்தார்.
    இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் டாக்டர் மணிகண்டனிடம் மேற்கண்ட வினோத்பாபு குடும்பத்துடன் சென்று தனக்கு உதவுமாறு மனு கொடுத்தார். அவரின் மனுவை பெற்றுக்கொண்டு விபரங்களை கேட்டறிந்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கி பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி கொள்ளுமாறும், இன்னும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் எந்த நேரமானாலும் தன்னை அணுகுமாறும் கூறினார். குடும்ப வறுமையால் அவதிப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி விளையாட்டு வீரர் வினோத்பாபுவிற்கு வேலைகிடைக்க ஏற்பாடுசெய்வதாகவும் உறுதி அளித்தார். உதவ யாரும் இல்லாமல் அவதிப்பட்டு வந்த வினோத்பாபு மற்றும் அவரின் குடும்பத்தினர் அமைச்சரின் உதவியால் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் மல்க நன்றிதெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து