டோனியின் வலிமையை யாராலும் கணிக்க முடியாது: நியூசி. முன்னாள் கேப்டன் ஃப்ளமிங் பெருமிதம்

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      விளையாட்டு
Dhoni-Flemming 2018 12 03

Source: provided

வெல்லிங்டன் : டோனியின் வலிமையைக் கணிக்க முடியாது என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃப்ளமிங் கூறியுள்ளார்.

முடிவுக்கு வந்தது...

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய டி20 அணியில் டோனிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் மட்டும் டோனி தற்போது விளையாடி வருகிறார். அந்த நிலையில், டோனி நீக்கப்பட்டது, கிட்டதட்ட டி20 போட்டிகளில் அவரது முடிவு வந்துவிட்டதாகவே கூறப்பட்டது.

ஏற்றுக்கொண்டார்...

டோனி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சித்தனர். டோனியின் இடத்துக்கு மாற்று வீரரை தேட வேண்டியது அவசியம் என்றும் அதனால் இப்போதே அதற்கான முயற்சியில் இந்திய கிரிக்கெட் அணி இறங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. நீக்கம் குறித்த முடிவு டோனியிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அதை அவர் ஏற்றுக்கொண்டார் என்றும் தகவல் வெளியானது.

கோலியே இறங்கினார்...

10 ஆயிரம் ரன்கள் எடுக்க ஒரே ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், டோனி மூன்றாவது வீரராக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வழக்கம் போல் விராட் கோலியே இறங்கினார். டோனி ஒரு ரன் அடிக்க அடுத்த இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் சற்றே கோபத்தை ஏற்படுத்தியது.

நிறைய வாய்ப்புகள்...

இந்நிலையில், இந்திய டி20 அணியில் டோனி இடம்பெறுவதற்கான முக்கியத்துவம் குறித்து நியூசிலாந்து முன்னாள் கேப்டனும், சென்னை அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃப்ளமிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மகேந்திர சிங் டோனியை அணிக்குள் சேர்க்க இந்தியாவுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. டோனியின் பலம் கணிக்க முடியாதது. கடந்த ஐபிஎல் தொடரை பார்த்தால் தெரியும், அவர் எவ்வளவு நன்றாக பேட்டிங் செய்து வருகிறார் என்று. டோனி நம்பிக்கை உடன் களத்தில் இறங்கி ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாட வேண்டும். ஒரு பெரிய கட்டத்தை அவர் எதிர் நோக்கிக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து