முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு: ஐகோர்ட்டில் ஜாக்டோ - ஜியோ தகவல்

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஜாக்டோ-ஜியோ நடத்தவிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஐகோர்ட் வேண்டுகோளை ஏற்று வரும் 10-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தால் ஏராளமான சலுகைகள் பறிபோய் விட்டதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். எனவே பாதிப்பை ஏற்படுத்தும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். அது போல இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில் 4-ம் தேதி முதல் (இன்று) காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்தனர். கடந்த 30-ம் தேதி அந்த அமைப்பினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் போராட்ட அறிவிப்பை கைவிடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் 4-ம் தேதி முதல் (இன்று) முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்குவதாக இருந்தது.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த வக்கீல் லோகநாதன் நேற்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்பு ஆஜரானார். ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை வரும் 10-ம் தேதி வரை ஒத்தி வைக்க இயலுமா என்று நிர்வாகிகளிடம் கருத்து கேட்டனர். அதற்கு சம்மதம் தெரிவித்த அவர்கள் கோர்ட் உத்தரவின்படி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம் என்றனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். 

இது குறித்து ஜாக்டோ ஜியோ மாநில நிர்வாகிகள் மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வருமாறு., 4-ம் தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்திருந்தோம். இந்நிலையில் ஐகோர்ட் மதுரைக் கிளையில் போராட்டத்துக்கு தடைக்கேட்டு பொதுநலவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அது நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பையும் கேட்டுக் கொண்ட நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து விட்டது. வரும் 9-ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

அரசுத் தரப்பில் வரும் 9-ம் தேதி அன்று ஜாக்டோ ஜியோ போராட்டத்தை நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதுவரை போராட்டத்தை ஒத்திவைக்க நீதிமன்றம் கேட்டுக்கொண்டதை ஏற்று அடுத்து நாளை (இன்று) நடக்கவிருந்த போராட்டத்தை 10-ம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப அன்று மாலை முடிவு செய்வோம் இவ்வாறு ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து