காங்கிரஸ் செய்த தவறுகள் எனது ஆட்சியில் சரி செய்யப்படுகின்றன - பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      இந்தியா
pm modii 2018 11 26

ஹனுமன்கார்க் : தொலைநோக்குப் பார்வை இல்லாத காங்கிரஸ் கட்சி செய்தி தவறுகள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில் சரி செய்யப்படுகின்றன என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 7-ம் தேதி 200 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பிரச்சாரம் நடந்து வருகிறது. பா.ஜ.க சார்பில் ஹனுமான்கார்க் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி நாட்டில் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தும் தொலைநோக்கு பார்வையில்லாமல் இருந்திருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் பகுதி இந்தியாவின் எல்லையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதை சுதந்திரத்தின் போது கேட்டுப் பெற்று இருந்தால், இன்று பாகிஸ்தான் பக்கம் சென்றிருக்காது. கர்தார்பூரை பெற்றதற்கான பெருமை உங்களை வந்து சேர்ந்திருக்கும். ஆனால், சீக்கிய குரு குரு நானக் தேவ் குறித்தோ, சீக்கிய மக்கள் குறித்தோ காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை, அவர்கள் மீது பற்றும் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் தீராத அதிகாரப் பேராசையால், தவறுகளால் இந்த நாடு ஏராளமான விலை கொடுத்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை வகுத்தவர்களின் நாட்டை ஆள வேண்டும் என்கிற வேகத்தோடு இருந்தார்கள். இந்தியா பிரிக்கப்பட்டபோது ஏராளமான தவறுகளை காங்கிரஸ் கட்சி செய்ததால்தான், இன்று கர்தார்பூரை பாகிஸ்தானிடம் இழந்திருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, ஏராளமான போர்களில் ஈடுபட்டு அதில் வென்றுள்ளது. ஆனால், கர்தார்பூர் சாஹிப்பில் சீக்கியர்கள் அமைதியாகச் சென்று வழிபாடு நடத்த எந்தவிதமான ஏற்பாடும் இதுவரை செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி ஏன் இந்தத் தவறுகளையும், அநீதிகளையும் இழைத்தது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் எல்லாம் என்னுடைய ஆட்சியில் சரி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு நீங்கள் நன்றிக்கடன் செலுத்த பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள்.

என்னுடைய அரசு விவசாயிகளுக்குச் சக்தி கொடுத்து வருகிறது. நவீன வேளாண்தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. சொட்டுநீர் பாசனம், சூரியஒளி பயன்பாடுகளை அறிமுகம் செய்து வருகிறது. ஆனால், வாரிசு அரசியலில் வந்தவர்களுக்குப் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாது. சிவப்பு மிளகாயில் இருந்துதான் விவசாயிகள் அதிக வருமானம் பெறுகிறார்கள் என்று நீங்கள் அவரிடம் தெரிவித்தால், விவசாயிகளைச் சிவப்பு மிளகாய் விளைவிக்கக் அவர் கூறுவார். இன்றைய சூழலில் விவசாயிகள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.

இந்தியாவில் ஒரு விவசாயின் மகன் பிரதமராக வந்திருந்தால், விவசாயிகள் இப்போது துன்பப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், விவசாயி மகன் சர்தார்படேல் பிரதமராக முயன்ற போது, காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாமல் ஒரு குடும்பத்தினரே ஆட்சி செய்து வருகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து