நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுல் காந்தியின் வருமானவரி கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய அனுமதி

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      இந்தியா
sonia-rahul 2018 12 04

புது டெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டு வருமான வரிக் கணக்குகளை மறுமதீப்பீடு செய்ய வருமான வரித்துறையினருக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதே சமயம் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் ராகுல், சோனியா ஆகியோருக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவும் வருமானவரித் துறையினருக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை யங் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் பெற்றதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ரூ. 50 லட்சம் கொடுத்து முறை கேடாகக் கையகப்படுத்தியதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி, காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார

இந்தக் குற்றச்சாட்டை சோனியா உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் மறுத்துள்ளனர். இந்த வழக்கில் சோனியா, ராகுல் உட்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டு வருமானவரிக் கணக்குகளை ஆய்வு செய்ய அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஆஸ்கார் பெர்னான்டஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரணை செய்த டெல்லி ஐகோர்ட், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஆஸ்கார் பெர்ணான்டஸ் மனுவை தள்ளிபடி செய்து மீண்டும் 2011-12-ம் ஆண்டு வருமான வரிக் கணக்குகளை ஆய்வுசெய்ய வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து ராகுல் காந்தி, சோனியா காந்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.கே. சிக்கிரி தலைமையில் நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிக்ரி பிறப்பித்த உத்தரவில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டு வருமானவரிக் கணக்குகளை மீண்டும் வருமானவரித்துறை ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், எந்தவிதமான உத்தரவும் இப்போது பிறப்பிக்க இயலாது. வருமானவரித்துறையும் எந்தவிதமான உத்தரவு பிறக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையை வரும் 2019, ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் எனத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து