அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது: ராஜஸ்தான், தெலுங்கானா மாநில சட்டசபைகளுக்கு நாளை தேர்தல்

ஆல்வார் : ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபைகளுக்கு நாளை 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில் அம்மாநிலங்களில் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன் கார் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஆட்சியில் அமர வேண்டும் என்ற பேராசையால் அப்போதைய காங் கிரஸ் தலைவர்கள் பல்வேறு தவறுகளை செய்தனர் என்று மோடி பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மலக்கேரா நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். இதன்படி வேலைவாய்ப்பு வழங் கப்பட்டிருந்தால், ஆல்வார் நகரில் 4 இளைஞர்கள் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார்கள்.
பிரதமர் மோடி, தான் பேசும் பொதுக்கூட்டங்களில் எல்லாம் ‘பாரத மாதாவுக்கு ஜே’ என முழங்கி பேச்சை தொடங்குகிறார். ஆனால் அவர், அனில் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுகிறார். எனவே, அவர் இனிமேல் அனில் அம்பானிக்கு ஜே, நீரவ் மோடிக்கு ஜே, லலித்மோடிக்கு ஜே எனக் கூறி பேச்சை தொடங்க வேண்டும் என்று கூறினார்.
இதே போல், தெலுங்கானாவில் ராஷ்டிர சமீதி கட்சித் தலைவரும் முதல்வருமான கே.சந்திர சேகரராவ், பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.