தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      தமிழகம்
chennai meterological 2018 10 24

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நேற்று முன்தினம் குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு திசையில் நகர்ந்து தற்போது குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா பகுதி வரை நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சோழவரத்தில் 8 செ.மீ. தாமரைப்பாக்கத்தில் 5 செ.மீ, சென்னை விமான நிலையம், பொன்னேரி, கடலூர் பகுதிகளில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று 6-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். எனவே, மீனவர்கள் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் ஓரிருமுறை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து