ஆஸி. மண்ணில் இந்தியா வரலாறு படைக்குமா ? முதல் டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடக்கம்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      விளையாட்டு
Adelaid Test 2018 12 05

அடிலெய்டு : இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்ததாக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. ‘ஆலன்-பார்டர்’ கோப்பைக்கான இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.

வரலாறு படைக்குமா ?

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது ஒரு யுத்தம் போன்றே வர்ணிக்கப்படுவது உண்டு. அங்கு 1947-ம் ஆண்டில் இருந்து 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றியதில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் பலவீனமடைந்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

பிர்த்வி ஷா காயம்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பேட்டிங்கை தான் மலை போல் நம்பி இருக்கிறது. 2014-15-ம் ஆண்டு அங்கு சென்ற போது 4 சதங்கள் உள்பட 692 ரன்கள் குவித்து புதிய உச்சத்தை தொட்டார். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் கோலி தான், ஆஸ்திரேலிய பவுலர்களின் பிரதான எதிரியாக இருக்கிறார். ‘இளம் புயல்’ பிரித்வி ஷா கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் முதலாவது டெஸ்டில் விளையாடமாட்டார்.

‘பவுன்ஸ்’ ஆடுகளம்...

முரளிவிஜயும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைப்பார்கள். இவர்கள் ஆஸ்திரேலியாவின் ஆவேச தாக்குதலை முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தாலே ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்து விடும். புஜாரா, துணை கேப்டன் ரஹானே ஆகியோரும் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும். பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே இருக்கும். அடிலெய்டு ஆடுகளத்தில் கொஞ்சம் புற்கள் இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் ஹக் ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி பார்த்தால், ஆடுகளத்தில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆகும். புவனேஷ்வர்குமார், பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியை மிரட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

ஆணிவேராக கவாஜா....

ஆஸ்திரேலிய அணி, இழந்த பெருமைகளை இந்த தொடரின் மூலம் மீட்டெடுக்கும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறது. சொந்த மண்ணில் களம் காணுவது அவர்களுக்கு சாதகமான அம்சமாகும். பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா ஆணிவேராக விளங்குகிறார். ஆனால் அவரது சகோதரர் பயங்கரவாத வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டு இருப்பதால் கவாஜா மனரீதியாக தடுமாறக்கூடும். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், பீட்டர் சிடில் உள்ளிட்டோர் சொந்த மண்ணில் அபாயகரமானவர்கள். விராட் கோலியை எப்படி வீழ்த்தலாம் என்று நாள்தோறும் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அது மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும் நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

ரிக்கி பாண்டிங் அறிவுரை

‘தொடக்கத்தில் அவர் எளிதாக பவுண்டரிகள் அடிக்க முடியாதபடி பீல்டிங்கை அமைக்க வேண்டும். வெவ்வேறு இடங்களில் பீல்டர்களை நிறுத்தி நாம் ஏதோ செய்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். பவுலிங்கில் குடைச்சல் கொடுத்த பிறகு, கொஞ்சம் வார்த்தை போரிலும் ஈடுபட்டால் கோலியை காலி செய்து விடலாம்’ என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ‘சாதாரணமாக இல்லாமல் முதல் பந்தில் இருந்தே கோலிக்கு ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும். ஏனெனில் 20 பந்துக்கு மேல் நிலைத்து விட்டால் அதன் பிறகு அவர் கணிசமாக ரன்கள் குவித்து விடுவார். அதனால் பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று முன்னாள் வீரர் கில்லெஸ்பி யோசனை தெரிவித்து இருக்கிறார்.

இந்திய அணி முதலிடம்...

மொத்தத்தில் இரு அணிகளும் நீயா-நானா? என்று வரிந்து கட்டுவதற்கு தயாராக இருப்பதால் இந்த தொடர் கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைப்பதற்கு குறைந்தது ஒரு டெஸ்டிலாவது இந்திய அணி ‘டிரா’ செய்ய வேண்டும். தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற முடியும். அவ்வாறு நிகழ்ந்தால் இந்திய அணி 108 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றினால் அதன் புள்ளி எண்ணிக்கை 120 ஆக உயரும். இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

டெஸ்ட் போட்டி அட்டவணை

தேதி  -  போட்டி  -  இடம் -  இந்திய நேரம்
1) டிச.6–10 - முதல் டெஸ்ட் - அடிலெய்டு - அதிகாலை 5.30 மணி.
2) டிச.14–18 - 2–வது டெஸ்ட் - பெர்த்  - காலை 7.50 மணி.
3) டிச.26–30 3–வது டெஸ்ட் மெல்போர்ன் அதிகாலை 5 மணி.
4) டிச.3–7  - 4–வது டெஸ்ட் - சிட்னி - அதிகாலை 5.30 மணி.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து