முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை திரும்ப பெறக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் - முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறியது

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை திரும்ப பெறக்கோரி நேற்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் முன்மொழிந்த இந்த தீர்மானம் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறியது. மேலும், காவிரி படுகையில் எந்தவொரு இடத்திலும், எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் உடனடியாக பிரதமர் மோடிக்கு தமிழக அரசு அனுப்பியது.

ஒருமனதாக தீர்மானம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று கூடியது. இதில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்கள் தலைமைச் செயலகத்துக்்கு மாலை 4 மணிக்கு வருகை தந்தனர். இக்கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதில், மத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற மத்திய நீர்வள அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

துணை முதல்வர்...

மேகதாது அணை தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு சட்டத்துக்கு புறம்பாக அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. காவிரிப்படுக்கையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பது தான் எங்கள் வாதம். தற்போது மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என தீர்மானம் மீது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கூட்டியதற்கு நன்றி...

மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது அணை குறித்து பேச சட்டப்பேரவையை கூட்டியதற்கு நன்றி. கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தது வருத்தம் அளிக்கிறது. மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக அரசு முன்பே உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றிருக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை. இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.

முழுமையாக ஆதரிக்கிறேன்...

தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. எனவே இதை மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும். இருப்பினும் மக்களின் நலனுக்காக முழுமையாக ஆதரிக்கிறேன். தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் என்று தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

உடனடியாக நடவடிக்கை...

முதல்வர் எடப்பாடி பேசுகையில்., ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேகதாது அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த அனுமதியை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தமிழகத்தில் உள்ள அனைவரும் கடுமையாக எதிர்த்து வருகிறோம். தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இந்த அனுமதியை திரும்பபெற மத்திய நீர்வள அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பேசினார்.

வருத்தம் அளிக்கிறது...

பின்னர் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பேசியதையடுத்து முதல்வர் பழனிசாமி அளித்த பதிலுறையில் தெரிவித்ததாவது, காவிரி நீர் 20-க்கும் மேற்பட்ட தமிழக மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்கிறது. காவிரி நீர் டெல்டா மக்களுக்கு ஆதாரமாக உள்ளது. பல்வேறு அணைகளை கட்ட கர்நாடகா முன்பிருந்தே முயற்சித்து வருகிறது. காவிரியில் தமிழகத்துக்கு அதிக உரிமை உள்ளது. காவிரி ஒப்பந்த ஷரத்துக்களை மீறும் வகையில் கர்நாடக அரசின் செயல் உள்ளது. பாசன பகுதிகளை கர்நாடகா 27 லட்சம் ஹெக்டேர் வரை உயர்த்தி உள்ளது. பாசன பகுதியை உயர்த்தியதால் தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது. காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்க நேரம் கேட்டபோது நேரமும் தரவில்லை, காவிரி நீரையும் தரவில்லை .தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்தது கர்நாடகாவில் ஆண்ட காங்கிரஸ் கட்சி என்று தெரிவித்தார்.

தீர்மானம் நிறைவேற்றம்...

இந்நிலையில், பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்ததையடுத்து, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். மேலும், தமிழக சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து