முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் - புஜாரா சதம் விளாசி அசத்தல்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்டு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா சதத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் திணறல்.

பேட்டிங் தேர்வு...

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில்  முரளிவிஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கி விளையாடி வருகிறார்கள்.
வீரர்கள் பட்டியல்:-

இந்தியா:

முரளிவிஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, ரிஷாப் பான்ட், அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ‌ஷர்மா, முகமது ‌ஷமி.

ஆஸ்திரேலியா:

மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.

ஆரம்பமே திணறல்

முன்னதாக இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைத்தது. விகாரியை பின்னுக்கு தள்ளிவிட்டு அவருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்தது. லோகேஷ் ராகுலும், முரளி விஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி திணறியது. 19 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. விராட் கோலி 3 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றம் அளித்தார். கம்மின்ஸ் முதல் ஓவரில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் அடித்த பந்தை ‘கல்லி’ பகுதியில் நின்ற உஸ்மான் குவாஜா ‘டைவ்’ அடித்து இடது கையில் பிடித்தார்.

4 விக்கெட்களை...

அடுத்து வந்த ரகானே 13 ரன்னில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழக்க ஸ்கோர் 41 ஆக இருந்தபோது இந்தியாவின் 4-வது விக்கெட் சரிந்தது. அடுத்து ரோகித் சர்மா களம் வந்தார். அவர் நம்பிக்கையுடன் ஆடினார். 24.4-வது ஓவரில் இந்திய அணி 50-வது ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்து மோசமான நிலையில் இருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை நாதன் லயன் பிரித்தார். ரோகித் சர்மா 61 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா, புஜாரா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்தது.

புஜாரா - அஸ்வின்...

அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிசப் பந்த், நாதன் லயன் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 25 ரன்கள் (2 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்திருந்தார். அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை 127 ரன்களுக்கு எடுத்து தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் புஜாராவுடன் தமிழக வீரர் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அஸ்வின் 76 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த இஷாந்த் சர்மா 4 ரன்னில் ஸ்டார்க் பந்தில் வெளியேற முகமது சமி களம் இறங்கினார்.

16-வது சதம்...

பொறுப்புடன் விளையாடிய புஜாரா தனது 16-வது சதத்தை பதிவு செய்தார். அடுத்து அதிரடியாக விளையாடிய இவர் ஸ்டார்க் ஓவரில் பவுண்டரி, சிக்சர் விளாசினார். இவர் 246 பந்துகளில் 123 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் கம்மின்ஸ் இவரை ரன் அவுட் முறையில் வெளியேற்றினார்.புஜாரா அவுட் ஆனதும் முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இந்தியா 87.5 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது. ஷமி 6 ரன்னுடனும் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா பந்து வீச்சில் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 2-வது நாள் ஆட்டம் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து