முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடிலெய்டு டெஸ்டில் வரலாற்று வெற்றி: 2003-ல் ராகுல் டிராவிட் - இன்று புஜாரா

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அடிலெய்டு : 2003-ம் ஆண்டு அடிலெய்டில் முதன் முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியை வெல்ல டிராவிட் முதுகெலும்பாக இருந்தார். அதேபோல் நேற்று டெஸ்ட் போட்டியை வெல்ல புஜாரா காரணமாக இருந்துள்ளார்.

முதல் வெற்றி...

இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. தொடரை இதுவரை வெல்லாத நிலையில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயமாகும். 2003-ம் ஆண்டு ராகுல் டிராவிட்டின் அபார ஆட்டத்தில் இந்தியா முதல் வெற்றியை ருசித்தது. நேற்று புஜாரா ஆட்டத்தால் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. இருவருக்கும் இடையே இந்த வெற்றியின் மூலம் பல்வேறு ஒற்றுமைகள் புதைந்துள்ளன.

இந்தியா 523 ரன்கள்

2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடியது. 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ரிக்கி பாண்டிங் இரட்டை சதத்தால் (242) 556 ரன்கள் குவித்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. லஷ்மண் 148 ரன்கள் சேர்க்க, 3-வது வீரராக களம் இறங்கிய ராகுல் டிராவிட் அபாரமாக விளையாடி 233 ரன்கள் குவித்தார். இவரது இரட்டை சதத்தால் இந்தியா 523 ரன்கள் குவித்தது.

வரலாற்று வெற்றி

33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 196 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவிற்கு 230 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ராகுல் டிராவிட் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடிக்க இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்தது. ராகுல் டிராவிட் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

புஜாரா காரணம்

ராகுல் டிராவிட் எப்படி செயல்பட்டு அணியை வெற்றி பெற வைத்தாரோ, அதேபோன்று 15 வருடங்கள் கழித்து நேற்று அடிலெய்டில் இந்தியா 2-வது முறையாக வெற்றி பெற்றதற்கு புஜாரா காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 41 ரன்னிற்குள் 4 விக்கெட்டை இந்தியா இழந்த நிலையில், 3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா 246 பந்துகள் சந்தித்து 123 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் இந்தியா 250 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 235 ரன்னில் சுருண்டது.

ஆட்ட நாயகன் விருது

15 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. புஜாரா 204 பந்துகளை சந்தித்து 70 ரன்கள் குவிக்க இந்தியா 307 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புஜாரா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். அன்று 3-வது நபராக களம் இறங்கி இரட்டை சதம், அரைசதத்துடன் அணியை வெற்றி பெற வைத்தார் ராகுல் டிராவிட். நேற்று புஜாரா சதம் மற்றும் அரைசதத்துடன் புஜாரா அணியை வெற்றி பெறவைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து