முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: மனோஜ் பிரபாகரை தேர்வு செய்வாரா கபில்தேவ் ?

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தனது முன்னாள் எதிரி மனோஜ் பிரபாகரை, மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் தேர்வு செய்வாரா என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்துள்ளது.

சர்ச்சையை கிளப்பியது...

இந்திய மகளிர் கிரிக்கெட்டின், ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மிதாலி ராஜ். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் பங்கேற்றார். முதல் இரண்டு போட்டியில் அரைசதம் அடித்திருந்த அவரை, முக்கியமான அரையிறுதி போட்டியில் அணியில் சேர்க்காமல் உட்கார வைத்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பி.சி.சி.ஐ விசாரணை

இந்திய கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து மிதாலி ராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவார், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. அதில், தனது புகழை ரமேஷ் பவார் முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார் என்றும் தன்னை அவமானப்படுத்தினார் என்றும் கூறியிருந்தார் மிதாலி. ரமேஷ் பவார், ‘பேட்டிங் வரிசையை மாற்றினால் கிரிக்கெட்டு முழுக்கு போடுவேன்’ என்று மிதாலி ராஜ் மிரட்டியதாக புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது.

நீட்டிக்கவில்லை...

இதற்கிடையே, பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலம் கடந்த மாதம் 30-ம் தேதியோடு முடிந்துவிட்டது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்ததாகவும் மிதாலியுடனான பிரச்னை காரணமாக கடும் அதிருப்திக்குள்ளான வாரியம், அவர் பதவியை நீட்டிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ரமேஷ் பவாரை 2021-ம் ஆண்டு வரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று டி20 அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘பவார், இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர். அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவரே பயிற்சியாளராக தொடர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

கபில்தேவ் தலைமையில்...

அதே நேரம் அவருக்கு பயிற்சியாளர் பதவி வழங்கக்கூடாது என்று கிரிக்கெட் வீராங்கனைகள் எக்தா பிஸ்ட், மான்சி ஜோஷி ஆகியோர் குரல் எழுப்பியுள்ளனர். இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இரு கோஷ்டி இருப்பதும் கடும் அரசியல் நிலவுவதும் மீண்டும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் ஆகியோர் விண்ணப்பித் துள்ளனர். இவர்களை, கபில்தேவ் தலைமையிலான குழு நேர்காணல் நடத்தி ஒருவரை பயிற்சியாளராக தேர்வு செய்ய இருக்கிறது.

எப்போதும் ஆகாது

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் மனோஜ் பிரபாகருக்கும், கபில்தேவுக்கு எப்போதும் ஆகாது என்று கூறப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிய போது சூதாட்டம் நடந்தது என்றும் அதற்கு கிரிக்கெட் வீரர்கள் உடந்தையாக இருந்ததாகவும் பரபரப்பு புகார் எழுந்தது. இதுபற்றிய உண்மையை ஒப்புக்கொண்ட அப்போதைய தென்னாப் பிரிக்க கிரிக்கெட் கேட்பன் குரோனே, இதில் ஈடுபட்டதாக முகமது அசாரூதீன், அஜய் ஜடேஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சலீம் மாலிக் ஆகியோர் பெயரையும் தெரிவித்திருந்தார். இது பரபரப்பை கிளப்பியது.

பதவியை விட்டு விலகல்

இந்நிலையில், ’‘இந்திய டிரெஸ்சிங் ரூமில் சூதாட்டம் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். கபில்தேவ் கூட இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார். சச்சின் டெண்டுல்கருக்கு இதுபற்றி எல்லாம் தெரியும்’’ என்று கூறி பரபரப்புக்கு இன்னும் எண்ணெய் ஊற்றினார் மனோஜ் பிரபாகர். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கபில்தேவ், இதை கண்ணீர் மல்க மறுத்து, பதவியை விட்டு விலகினார். இந்தப் பிரச்னையில் கபில்தேவும், மனோஜ்பிரபாகரும் அப்போது மோதி கொண்ட விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது காலம் மாறியிருக்கிறது. மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக விண்ணப்பித்திருக்கும் மனோஜ் பிரபாகரை, கபில்தேவ் நேர்காணம் செய்ய வேண்டும். அவரை தேர்வு செய்வாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து