முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கூட்டுறவு வங்கியின் கீழையூர் கிளையினை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு திறந்து வைத்தார்

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை, - மத்திய கூட்டுறவு வங்கியின் கீழையூர் கிளையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்தார்.
    மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, கீழையூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் 44வது கிளையினை மாவட்ட  கலெக்டர் நடராஜன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு நேற்று திறந்து வைத்து 335 பயனாளிகளுக்கு ரூ.1,61,47,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
    தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, விவசாயிகளின் நலன் கருதி மத்திய கூட்டுறவு வங்கியின் 44 - வது கிளை கீழையூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இரு மடங்காக உற்பத்தி, மூன்று மடங்காக வருமானம் பெறும் பொருட்டு 2011 முதல் 30.11.2018 வரை 76,95,561 விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.38,728.08 கோடி அளவிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் (2018-19) மட்டும் மாநில அளவில் ரூ.8000 கோடி வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட வேண்டும் என குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, 30.11.2018 வரை, 6,55,099 விவசாயிகளுக்கு ரூ.4,518.01 கோடி வழங்கப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்திற்கு ரூ.160 கோடி அளவிற்கு குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை, 10,382 விவசாயிகளுக்கு ரூ.74.91 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
  கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தொழில்நுட்ப வசதிகளை வழங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.  மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 43 கிளைகளுடன் மதுரை மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தினை முழுமையாக செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.  கீழையூர் கிளை மூலமாக மேலூர் தாலுகாவில் உள்ள கீழையூர், கீழவளவு, கொங்கம்பட்டி, சருகுவலையப்பட்டி, தனியாமங்கலம், நாவினிப்பட்டி, தும்பைப்பட்டி, பூதமங்கலம் மற்றும் எட்டிமங்கலம் ஆகிய ஏழு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின், விவகார எல்லையில் உள்ள 16 வருவாய் கிராமங்களில் உள்ள மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பயனடைவார்கள். 
    இவ்வங்கி மைய வங்கியியல் தீர்வு முறை மூலம் அனைத்து கிளைகளும் கணினிமயமாக்கப்பட்டு விரைவான சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.  இவ்வங்கியின் பிரதான கிளையில் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம் நிறுவப்பட்டு 6,877 வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.  மதுரை மாவட்டத்தில் 131 பொதுச் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  இதன் மூலம் மக்களுக்கு சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், திருமண உதவி நலத்திட்ட சான்றிதழ், பட்டா, சிட்டா நகல் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்ற பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்குவதற்காகவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 2,104 வேளாண் சேவை மையங்கள் துவங்கப்பட்டன.  பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 30.11.2018 வரை தமிழகம் முழுவதும் உள்ள 12,70,285 விவசாயிகளுக்கு ரூ.3,613.61 கோடியும், மதுரை மாவட்டத்தில் 13,854 விவசாயிகளுக்கு ரூ.36.64 கோடியும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உன்னதத்திட்டமான அம்மா மருந்தகம் மூலம் அனைத்து தரப்பு மக்களும் 15 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளைப் பெற்று பயனடையும் வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா மருந்தகங்கள் மற்றும் 20 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 35 மருந்தகங்கள் மூலம் இதுவரை ரூ.54.67 கோடி அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  மாநில அளவில் 111 அம்மா மருந்தகங்கள் மற்றும் 170 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 281 மருந்தகங்கள் மூலம் 30.11.2018 வரை ரூ.686.89 கோடி மதிப்பிலான தரமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் அம்மாவின் ஆணையின்படி, ஏழை, எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மகத்தான திட்டமான விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின்படி 1,78,21.946 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் அரும்பணியினை கூட்டுறவுத்துறையால் நடத்தப்பட்ட 32,793 நியாயவிலைக்கடைகள் மேற்கொண்டு வருகின்றன.  கூட்டுறவு நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுவிநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் புகார்கள் ஏதுமின்றி பணியாற்றிட வேண்டும் எனவும், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் இப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்துக் கொள்ளுமாறும், தவறு செய்யும் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் பேசினார்.
   பின்னர் இந்நிகழ்ச்சியில் 72 பயனாளிகளுக்கு ரூ.33,12,000 மதிப்பிலான முதலீட்டுக்கடன்களும், 175 பயனாளிகளுக்கு ரூ.28,30,000 மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழு கடன்களும், 58 பயனாளிகளுக்கு ரூ.43,05,000 மதிப்பிலான பயிர்க்கடன்களும், 20 பயனாளிகளுக்கு ரூ.5,00,000 மதிப்பிலான மகளிர் சிறு வணிக கடன்களும், 10 பயனாளிகளுக்கு ரூ.52,00,000 மதிப்பிலான பணியாளர்கள் சிக்கன நாணயச்சங்ககடன்கள் என மொத்தம் 335 பயனாளிகளுக்கு ரூ.1,61,47,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.
    இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் பா.இராஜேஸ் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ம.தீபாசங்கரி, மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் மல்லிகா, துணைப்பதிவாளர்கள், வங்கி அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து