முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான செய்திகளை பரப்புகின்றனர் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான செய்திகளை பரப்புகின்றனர் என்று சேலத்தில் நடைப்பெற்ற விழாவில் முதல்வர்

எடப்பாடி பேசினார்.

சேலம் மாநகரில் நேற்று நடைபெற்ற, பல்வேறு திட்டங்கள், சீர்மிகு நகரத் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி. பழனிசாமி பேசியதாவது.,

நிவாரண உதவிகள்...

கஜா புயலால் பல மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் அழிந்து விட்டது. அங்கு இருக்கின்ற தென்னை மரம், தேக்கு மரம், சவுக்கு மரம், வெற்றிலைக்கொடி, மற்றும் பல மரங்கள், நெற்பயிர்கள் அழிந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றார்கள். உண்மையிலேயே மனம் வேதனைப்படுகின்றது.  அவர்கள் வாழ்வை புனரமைப்பதற்காக அம்மாவின் அரசால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆட்சியில் எதுவும் கிடைக்கவில்லை, இன்னும் விரைந்து நடக்க வேண்டும் என்று வேண்டுமென்றே ஒருசில எதிர்க்கட்சிகள் தவறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

75 சதவீதப் பணிகள்...

இன்றைக்கு புயலால் 2,21,000 மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. 21 ஆயிரம் மின்சார ஊழியர்கள் அங்கேயே முகாமிட்டு, இரவு, பகல் பாராமல், மழையை பொருட்படுத்தாமல், மக்களுக்கு மின்சார இணைப்பு கொடுப்பதற்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 75 சதவீதப் பணிகள் இன்றைக்கு நிறைவு பெற்றிருக்கின்றன, மீதம் 25 சதவீத பணிகள் தான் இருக்கும், அவைகளும் வேகமாக முடிக்கப்பட்டுவிடும். டெல்டா பாசனப் பகுதிகள் வயல்கள் நிறைந்த பகுதிகளாதலால், மின்கம்பங்கள் நடுவது மிகவும் கடினமான பணி, சொல்வது சுலபம், செயல்படுவது கடினம். உயிரைப் பணயம் வைத்து நம்முடைய மின்சார ஊழியர்கள் அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதேபோல, உள்ளாட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 2400 நபர்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள குப்பைகளை எல்லாம் அகற்றி, தூய்மைப்படுத்தி பழைய நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். உள்ளாட்சி துப்புரவுப் பணியாளர்களும், அதற்காகப் பாடுபட்ட உள்ளாட்சியைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த, உளமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அர்ப்பணிப்பு உணர்வோடு...

அதேபோல, வருவாய்த் துறை அதிகாரிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள்.  வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, ஆறுதல் சொல்லி, அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை, வேகமாக, துரிதமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தில் இருக்கின்ற அத்தனை அரசு ஊழியர்களையும் சிறப்பான முறையிலே பணியாற்றுகின்றார்கள். கஜா புயல் எந்த வேகத்தில் வந்ததோ, அதே வேகத்தில், தங்களுடைய பணிகளைக் கொண்டு சீர் செய்கின்ற உள்ளம் படைத்த, நல்ல, நேர்மையான, திறமையான, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய அந்த நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து