முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம், கொள்கை, கோட்பாடு ஏதும் இல்லாத தி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார் என்று சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் கடமலை பகுதியில் பொதுமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், கூடமலை பகுதியில் நேற்று பொதுமக்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அம்மாவின் மறைவிற்கு பிறகு, இந்த ஆட்சி கலைந்து விடும். தான் முதலமைச்சராகி விடலாம் என்று கனவு கண்டிருந்தார். அந்தக் கனவு பகல் கனவாகி விட்டது.  டி.டி.வி தினகரனும், தி.மு.க.-வின் தூண்டுதலில், இந்தக் கட்சியை உடைக்க ஒரு கட்சியை ஆரம்பித்தார்.  இன்றைக்கு பாலாஜி என்கிற ஒரு செங்கல் பிடுங்கி சென்று விட்டது. அவர் முதல்வராக வேண்டும் என்று எங்களிடமிருந்து பிரிந்து சென்றார். இப்பொழுது ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று சென்றிருக்கிறார். கடைசியில், யாருடன் நடுத்தெருவில் நிற்கப் போகிறாரோ தெரியவில்லை. இதை எதற்காக சொல்கிறேனென்றால், தி.மு.க.விற்கு கொள்கை, கோட்பாடே கிடையாது, அதிகாரம் மட்டும்தான் அவர்களுக்குத் தேவை.

எல்லாம் வாரிசு... 

பாரதீய ஜனதா ஆட்சியின் பொழுது, கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தார்கள். அதற்கு சறுக்கல் வந்தவுடன், காங்கிரசிடம் கூட்டு சேர்ந்து அங்கே மத்திய அமைச்சராக இருந்தார்கள்,  அவர்களுக்குத் தேவை அதிகாரம் ஒன்றுதான்.  14 ஆண்டு காலம் தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்த ஒரு கட்சியான தி.மு.க. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவர்கள் குடும்பம்தான் வளர்ந்தது, கருணாநிதி, அவருடைய பையன், இப்பொழுது பேரனும் வந்து விட்டார்.  எல்லாம் வாரிசு.  அ.தி.மு.க.வில் திறமை இருப்பவர்கள்,  மக்களுக்கு உழைப்பவர்கள்தான் பதவிக்கு வர முடியும்.  சாதாரண தொண்டன், விவசாயத் தொழிலாளி கூட வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், வீரகனூரில் செய்தியாளர்களை சந்தித்கையில்  தெரிவித்தாவது.,

இன்றைக்கு ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதி, கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டோம்.  சுறிறுப் பயணம் மேற்கொள்கிறபொழுது மக்கள் எழுச்சியாக வரவேற்பு கொடுத்தார்கள். இப்பொழுது இறுதியாக, தற்போது நடைபெற்றுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற வீரகனூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 15,000 பேர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, 27,092 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கேள்வி : அடுத்து ஒரு புயல் வலுவாக இருக்குமென்று சொல்கிறார்கள், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
பதில் : தற்பொழுது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளபடி எந்த சேதாரமும் ஏற்படாது,  ஆனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.  அதற்கு முன்னேற்பாடாக அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி : அணை பாதுகாப்பு மசோதாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறீர்கள் ...
பதில் :  அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து நாங்கள் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம், அதுமட்டுமல்ல, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் இந்த அணை பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்திருக்கிறார்கள். இந்த அணை பாதுகாப்பு சட்டத்தினால், தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற விவரத்தை மத்திய அரசிற்கு எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

கேள்வி : மேகதாது அணை கட்டுவது குறித்து ...
பதில் : ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை கொடுத்திருக்கிறது. எந்த ஒரு அணை கட்டவேண்டுமானாலும், அந்த மாநிலத்திற்கு கீழ் உள்ள மாநிலத்தின் இசைவு பெறாமல் எந்தவித கட்டுமானப் பணியையும் மேற்கொள்ள முடியாது. ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்புஅளித்தபடிதான் அனைத்து மாநிலங்களும் நடந்து கொள்ள வேண்டுமென்று இந்தத் தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி : தண்ணீர் பிரச்சினையில் அனைத்து மாநிலங்களும் நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறார்களே?
பதில் : இன்றைக்கு மட்டுமல்ல, 50 ஆண்டுகாலமாக வஞ்சித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். நாம் சட்டப் போராட்டம் நடத்திதான் தீர்ப்பை பெறவேண்டும் என்ற சூழ்நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.

கேள்வி : ஸ்டாலின் தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டிருக்கிறார், 700 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்தது என்றும், அவர் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாகவும் தகவல் வெளியிட்டிருக்கிறாரே?
பதில் : போய்ட்டு போகிறார். நடந்திருந்தால் தானே போக முடியும். ஏற்கனவே, காலையிலிருந்து மாலை வரை பல்வேறு பொதுக் கூட்டங்களில் பேசினேன். முதலில், இந்த ஆட்சி கவிழும், கட்சி உடையும் என்று பார்த்தார்கள், ஒன்றும் நடக்கவில்லை. ஊழல் செய்திருக்கிறார்கள், அதனால் நீதிமன்றத்திற்கு போகிறோம் என்று  இன்றைக்கு புதிய ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே, என் மீது வழக்க போட்டார்கள், உச்சநீதிமன்றத்தில் தடையாகி போய்விட்டது. வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சி மீது குற்றம் சுமத்துவதற்காக பொய் பிரச்சாரத்தை இப்பொழுது முடுக்கி விட்டிருக்கிறார்கள், ஒன்றும் எடுபடாது. அரசைப் பொறுத்தவரை, ஒப்பந்தப்புள்ளி திறந்தவெளி ஒப்பந்தம், யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம், தகுதியானவர்களுக்குத்தான் ஒப்பந்தம் கிடைக்கும்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எப்படி டெண்டர் விட்டார்களோ அதே முறைதான் பின்பற்றப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபொழுது, எந்த அடிப்படையில் ஒப்பந்தம் விட்டாரோ, அதே அடிப்படையில்தான் இப்பொழுதும் ஒப்பந்தம் விடுகிறார்கள். இதில் எப்படி முறைகேடு நடக்கும்? முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை. வேண்டுமென்றே இந்த ஆட்சி மீது பழி சுமத்த வேண்டும், குற்றம் சுமத்த வேண்டும், பொய் பிரச்சாரத்தை மக்களிடத்தில் பரப்ப வேண்டும், இன்றைக்கு நாளுக்கு நாள் அரசுக்கு நற்பெயர் வந்து கொண்டிருக்கின்றது, அதற்கு களங்கம் கற்பிக்கின்ற விதத்தில் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறார்.

கேள்வி : அதிமுக ஒரு மூழ்கும் கப்பல் என்று செந்தில் பாலாஜி சொல்லியிருக்கிறாரே?
பதில் : வேடிக்கையாக இருக்கிறது. அவர் 1996-ல் திமுக-வில் இருந்தவர், கவுன்சிலருக்கு போட்டியிட்டவர், அப்பொழுது அந்த எண்ணம்தான் இருக்கும். இதுவரையில், அதிமுக-வில் இருந்து பலனை அனுபவித்தார், அதிமுக-வினால் தான் நாட்டிற்கு இந்த பாலாஜி யார் என இவர் அடையாளம் காட்டப்பட்டார்.  இந்தக் கட்சியில் இருந்ததால்தான், அவருக்கு சீட் கிடைத்து, எம்.எல்.ஏ ஆகி போக்குவரத்துத் துறை அமைச்சராக உயர்ந்த பொறுப்புக்கு வந்தார். நன்றி மறப்பது நன்றன்று  நன்றல்லதன்றே மறப்பது நன்று   என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பொருத்தமாக பாலாஜிக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து