முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிஸோரம் முதல்வரானார் ஸோரம்தங்கா: மிஸோ மொழியில் பதவியேற்றார்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அய்ஸ்வால் : மிஸோரம் சட்டப் பேரவைத் தேர்தலில் மிஸோ தேசிய முன்னணி கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா, மாநில முதல்வராக   நேற்று பதவியேற்றார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஸோரமில், கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அங்குள்ள 40 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இதில், முக்கிய மாநில கட்சியான மிஸோ தேசிய முன்னணி, 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் அக்கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. பா.ஜ.க. ஒரு இடத்திலும், ஸோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதனிடையே, மிஸோ தேசிய முன்னணியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்காவும், துணை முதல்வராக தான்லுயாவும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, கவர்னர்  கும்மனம் ராஜசேகரனை சந்தித்த அவர்கள், ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

இந்நிலையில், ஐஸாலில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று  மதியம் நடைபெற்ற விழாவில் முதல்வராக ஸோரம்தங்கா, மிஸோ மொழியில் பதவியேற்றார். அவருக்கு கவர்னர்  கும்மனம் ராஜசேகரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மிஸோரமில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஆட்சியை பிடித்துள்ள மிஸோ தேசிய முன்னணி, ஆரம்பத்தில் பிரிவினைவாத இயக்கமாக செயல்பட்டது. பின்னர் 1986-ஆம் ஆண்டில் மிஸோ உடன்படிக்கையின் மூலம் வன்முறையை கைவிட்டு, அரசியல் கட்சியாக உருவெடுத்தது. இக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா (74), 1998 முதல் 2008 வரை மிஸோரம் முதல்வராக பதவி வகித்தவர். தற்போது மூன்றாவது முறையாக அவர் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து