இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு?

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      உலகம்
Ranil Wickramasinge 2018 12 16

கொழும்பு : ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, அப்பதவிக்கு ராஜபக்சேவை நியமித்த அதிபர் சிறிசேனாவின் முடிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ரணிலும் தான் பிரதமராகவே நீடிப்பதாக அறிவித்தார். நாடாளுமன்றத் தலைவர் ஜெயசூர்யாவும் அரசியலமைப்புச் சட்டப்படி ரணிலே பிரதமர் என்று அறிவித்தார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்ட சிறிசேனா, நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். சிறிசேனாவின் இந்த முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில், கரு ஜெயசூர்யா நாடாளுமன்றத்தைக் கூட்டினார். அங்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சிறிசேனா - ராஜபக்சே கூட்டணி தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது.

இந்த நிலையில் பிரதமர் பதவியை நேற்று முன்தினம் ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதிபர் சிறிசேனா - ராஜபக்சே கூட்டணிக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றம் அளித்த இரண்டு அதிரடித் தீர்ப்புகளையடுத்து ராஜபக்சே இந்த முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில், இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் நேற்று பதவியேற்றார். ரணிலுக்கு அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 30 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் அதிபர் சிறிசேனாவின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் இடம்பெற இருப்பதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து