கருணாநிதி சிலை திறப்பு விழா: கமல்ஹாசன் புறக்கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      தமிழகம்
Kamal 2017 12 31

சென்னை : சென்னையில் நேற்று நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை.

சென்னையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த சிலையை காங்கிரசின் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் அவரது மகனும், தற்போதைய காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழக தலைவர்கள் வீரமணி, வைகோ, முத்தரசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். திரையுலகத்தை பொறுத்தவரையில் நடிகர் ரஜினிகாந்த், விவேக், பிரபு நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இந்த விழாவில் பங்கேற்காமல் விழாவை புறக்கணித்தார். இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,

கட்சி பணிக்காகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களை பார்ப்பதற்காகவும் நிர்வாகிகளுடன் அங்கு சென்று கொண்டிருக்கிறேன். எனவே கலைஞர் சிலை திறப்பு விழாவில் நான் பங்கேற்க இயலவில்லை. ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகள் என்பதால் அங்கு செல்வதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அவர் பங்கேற்காமல் புறக்கணித்தது தி.மு.க.வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து