முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

கோவை : நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு  செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பொதுமக்கள் அவருக்கு  உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது சுற்றுப்பயணத்தின் போது புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் எடப்பாடி வழங்கினார். முன்னதாக செல்லும் வழியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும்  முதல்வர் பெற்றுக் கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளிகள் பலர் முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்நிலையில் அம்மா  மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் விலகி நேற்று முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அ.ம.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் அக்கட்சியில் இருந்து விலகி 150-க்கும் மேற்பட்டோர் முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்குப் பின்னரே  கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சில தினங்களுக்கு முன்பு கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் இப்போது உள்ளவர்கள் வெளியே செல்லலாம். வெளியில் உள்ளவர்கள் உள்ளே வரலாம் என்று கூறியதை சுட்டிக் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எனவே கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பிறகே முடிவாகும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ராகுல் காந்தியை பிரதமராக ஸ்டாலின் அறிவித்திருப்பது அவரது சொந்த விருப்பம் என்றும் மற்றொரு கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார். முன்னதாக நேற்று சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின் ராகுலை புகழ்ந்து பேசினார். அதை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மேற்கண்டவாறு பதிலளித்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே கூறியது போல ஸ்டெர்லைட் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த பேட்டியின்  போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனிருந்தார். அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் உள்ளாட்சி தேர்தல் பணிகள் படிப்படியாக நடந்து வருவதாக அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து