முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் மற்றும் சுனாமி குறித்து முன்கூட்டியே அறிய தமிழக மீனவர்களுக்கு நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : புயல் மற்றும் சுனாமி குறித்து மீனவர்கள் முன்கூட்டியே அறியும் வகையில் சென்னை, கன்னியாகுமரி மற்றும் நாகை மாவட்ட மீனவர்களுக்கு செல்போன் மூலம் அறிவிக்கும் புதிய தகவல் தொடர்பு சாதனங்களை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

7 மீனவர்களுக்கு...

2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீன்பிடி படகு குழுக்களுக்கு ஆழ்கடல் தகவல் தொடர்பு சாதனைங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நேவிக் எனும் செயற்கைகோள் மூலம் குறுஞ்செய்தி பெறும் ஆழ்கடல் தகவல் தொடர்பு கருவியினை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் 80 மீன்பிடி படகு குழுக்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, சென்னை, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள 7 மீனவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேவிக் கருவிகளை வழங்கி துவக்கி வைத்தார்.

ஆண்ட்ராய்டு...

இந்த நேவிக் கருவியானது, இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் அமைப்பின் உதவியுடன் வானிலை எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு, சுனாமி, நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த குறுஞ்செய்திகளை பெற்று, புளூடூத் இணைப்பு மூலம் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட மீனவர்களின் கைபேசிக்கு அனுப்புகிறது. கைபேசி கருவி, இத்தகவலை மாற்றம் செய்து தகவலாக கைப்பேசி திரையில் தமிழ் உட்பட பிற பிராந்திய மொழிகளில் திரையிடுகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளின் பயனாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் 200 நேவிக் கருவிகளை தமிழ்நாடு மீனவர்களின் உடனடி பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பிரதிநிதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து