முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான தொழில்நுட்பம் குறித்த பயிற்சி கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.
 ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், குயவன்குடி கிராமத்திலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக விவசாயிகள் நலவாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் வேளாண்மைப்பணிகளில் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி கலெக்டர் வீரராகவராவ் தலைமையில்  நடைபெற்றது. அப்போதுஅ வர் பேசியதாவது:- மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி விவசாயிகள் நலவாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த ஜுன் 1 முதல் ஜுலை 31 வரையிலான நாட்களில் 25 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல், வேளாண்மைப்பணிகளை எளிமையாக்கும் தொழில்நுட்ப பயிற்சிகள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் வேளாண் உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான பயிற்சிகள் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
 அதன்தொடர்ச்சியாக, தற்போது 2-ம் கட்டமாக கூடுதலாக 25 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு; அக்டோபர் 2 முதல் டிசம்பர் 25 வரையிலான நாட்களில் அந்தந்த கிராமங்களில் பல்வேறு விதமான விவசாயிகள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் இன்றைய தினம் நடைபெறும் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி குறித்த இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை மேலாண்மை, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்த நடைமுறையே சிறந்த வேளாண்மை பயிற்சியாகும். அதனடிப்படையில், இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக மகசூல் ஏற்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, கால்நடை நோய்த்தடுப்பு, தேனீ வளர்ப்பு, சொட்டுநீர் பாசனம், மாடித்தோட்டம் அமைத்தல், மானியத்துடன்கூடிய அரசு நலத்திட்டங்கள்  உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  இப்பயிற்சியினை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பாக 2 விவசாயிகளுக்கு நிலக்கடலை மினி கிட்களையும், 2 விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்களையும், 2 விவசாயிகளுக்கு தென்னை நுண்ணூட்ட உரங்களையும், 2 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பாக 3 விவசாயிகளுக்கு பயிர் விதைகளையும் கலெக்டர் வழங்கினார்.
 இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.ஆர்.சுசிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.சேக்அப்துல்லா, வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) எல்.சொர்ணமாணிக்கம், ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.கவிதா, வேளாண்மை காப்பீட்டு நிறுவன உதவி பொது மேலாளர் லெட்சுமணன் உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து