வைகுண்ட ஏகாதேசி நாளில் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?

புதன்கிழமை, 19 டிசம்பர் 2018      ஆன்மிகம்
vaikunda-ekadasi

Source: provided

மனம், வாக்கு செயல் மூன்றையும் ஒரே நிலையில் நிறுத்துவதுதான் ஏகாதசி. மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது மார்கழி மாதத்தில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.

இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.ஜ1ஸ. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும் , இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

மகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் கிருட்டிணன் அருச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது. ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரமபத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும். ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறதுஎனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர். ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.

வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது!

வாழும் அவசர உலகில் மாதந்தோறும் வரும் ஏகாதசியை அனுசரிப்பது மிகவும் நல்லது. பிரதமை திதியிலிருந்து பத்தாவது நாளான தசமியிலும் துவாதசியிலும் ஒரே வேளை உணவைத்தான் உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே எழுந்து நீராடி, பூஜையில் அமர்ந்து அந்தப்பரந்தாமனை மனதில் தியானித்து வழிபடவேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டும். முதியோர்கள் உடல் நலிவுற்றவர்கள், பூஜையில் வைத்து நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை சாப்பிடலாம்.

பகலில் தூங்காமல் இருந்து, அன்றன்றைக்கு உரிய வேலைகளை கர்மசிரத்தியோடு செய்து முடிக்க வேண்டும். இரவில் விழித்து பகவானின் புகழ் பாடும் பக்திப்பாடல்கள் மற்றும் பாசுரங்களைப் பாடிக்கொண்டு இறை சிந்தனையிலேயே இருக்க வேண்டும். கண்விழித்து இருந்து பகவானின் நாமத்தைச் சொல்லும் பாடல்கள், பஜனைகள் செய்து, ஆன்மிகக் கதைகளைப் படித்துக்கொண்டோ பாராயணம் செய்து கொண்டோ மனதை ஒருங்கிணைக்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் தொடங்கி திருப்பதி வரை உள்ள வைணவக் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். இதில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் இறைவனின் அருட்கடாட்சத்தைப் பெற வரிசையில் காத்திருந்து சொர்க்க வாசல் வழியாகச் சென்று இறையருளைப் பெறுவார்கள். மறுநாள் துவாதசி நாளில் காலைக் கடன்களை முடித்துவிட்டு விருந்தினர்களுக்கு, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றோடு அமுது படைத்து உண்ண வேண்டும்.

செய்யக்கூடாதவை!

இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்பதற்காக தாயம் ஆடுவார்கள். அதற்கு பேசாமல் தூங்கி விடுவதே நன்று. ஏனெனில் எந்த வீட்டில் தாய சத்தம் கேட்கிறதோ, அந்த வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்க மாட்டாள். அந்த விளையாட்டின்போது, இதோ 2 போட்டு உன் தலையை கொய்கிறேன், 4 போட்டு உன் வெட்டுகிறேன் என கூறிக்கொள்வார்கள். ஒரு தெய்வத்திற்கு உகந்த நாளில் இப்படி அபசகுண வார்த்தைகளை கேட்டால் எப்படி இறவனின் அருள் கிட்டும்? சினிமாவுக்கு செல்வார்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துகொண்டே கண் விழித்திருப்பார்கள். இதுவும் தவறே.

அதேபோல பரமபத விளையாட்டு ஆடும் வழக்கம் உள்ளது. இதையும் செய்யக்கூடாது. ஏகாதசி அன்று உணவு அளிக்கவும் கூடாது. அந்த உணவை ஏற்கவும் கூடாது எனபது சாஸ்திர நியதி. ஏகாதசி நாளில் விரதம் இருப்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றிசெலுத்துவதாகும்.

மனத்தூய்மை அடைந்தாலே, இனிமையான வாழ்க்கை நமக்கு அமைந்திடும். மனம், வாக்கு செயல் மூன்றையும் ஒரே நிலையில் நிறுத்துவதுதான் ஏகாதசியின் நோக்கமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து