முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜடேஜாவின் காயம் விவகாரம்: ரவி சாஸ்திரி பேச்சுக்கு பி.சி.சி.ஐ. முற்றுப்புள்ளி

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை, சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா காயத்தால் அவதிப்பட்டார் என்ற ரவி சாஸ்திரியின் பேச்சு பெரும் புயலை கிளப்பியது. அதற்கு பி.சி.சி.ஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பெர்த் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வு முறைகளை முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர். இந்திய அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்கியது தவறு என்று கூறிய அவர்கள், அஸ்வின் காயம் அடைந்த நிலையில் ஜடேஜாவை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டினர். இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றதையும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,  பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு குறை சொல்வதும், விமர்சிப்பதும் எளிது. எங்களை பொறுத்தவரை, அணியின் நலனுக்கு எது சிறந்ததோ அதை செய்கிறோம். அஸ்வின் காயத்தில் சிக்கிய நிலையில் பெர்த் டெஸ்டில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை சேர்த்து இருக்கலாம் என்று சொல்கிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அப்போது ரவீந்திர ஜடேஜா உடற்தகுதியுடன் இல்லை. தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட அவருக்கு ஆஸ்திரேலியா வந்து இறங்கியதும் 4 நாட்களுக்கு ஊசி போடப்பட்டது. காயம் சரியாவதற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்கள் ஆகி விட்டது என்று தெரிவித்திருந்தார். ரவி சாஸ்திரி வெளிப்படுத்திய இந்த தகவல் புதுவித சர்ச்சையை கிளப்பியது.

இதற்கிடையில் இந்தியாவில் இருந்து புறப்படும்போது ஜடேஜா உடற்தகுதியுடன்தான் இருந்தார் என சவுராஷ்டிரா அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் பெரிய புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பி.சி.சி.ஐ, ஜடேஜா உடற்தகுதியுடன் இந்தியாவில் இருந்து சென்றார் என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடந்த ரஞ்சி கிரிக்கெட்டில் பங்கேற்ற ஜடேஜா எந்தவித காயப் பிரச்சினையும் இன்றி 64 ஓவர்கள் பந்து வீசினார். அதைத் தொடர்ந்தே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணிக்கு தேர்வானார். சிட்னியில் நடந்த பயிற்சி கிரிக்கெட்டின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் பிரச்சனை ஏற்பட்டது. ஊசி போட்டு ஓய்வு கொடுத்த நிலையில் அவரது தோள்பட்டையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இப்போது 3-வது டெஸ்டில் விளையாட தயார் நிலையில் இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து