சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு - 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2018      ஆன்மிகம்
SABARIMALA-temple 2018 10 16

திருவனந்தபுரம் : மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். இன்றைய தினம் மற்ற விஷேச பூஜைகள் நடை பெறாது. இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும். பிரசித்தி பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது. இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ம் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து