முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா?

சனிக்கிழமை, 5 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாக்கள் நிறைவேறின. இதன் மூலம் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி)  வழங்க வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார். ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது, அதோடு அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுதியாக உள்ளது.

இதனால் செலவின மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட செலவின மசோதா, செனட் சபையில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற தவறியதால் நிறைவேற்ற முடியாமல் போனது.இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின.மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் சமரசம் ஏற்படாததால் அரசு துறைகள் முடக்கம் 2 வாரங்களை கடந்து நீடிக்கிறது.

இந்த நிலையில், பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பொறுப்பேற்றனர். இதன் மூலம் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சியின் பலம் கூடியது. மேலும் பிரதிநிதிகள் சபையில் தலைவராக ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிலுவையில் உள்ள 2 செலவின மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த 2 மசோதாக்களிலும் மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த மசோதாக்கள் மூலம் பிப்ரவரி 8-ந்தேதி வரை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைக்கும், செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை மற்ற பல அரசுத்துறைகளுக்கும் தேவையான நிதித்தேவை பூர்த்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.

முதல் மசோதாவுக்கு ஆதரவாக 239 உறுப்பினர்களும், எதிராக 192 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதே போல் 2-வது மசோதாவுக்கு ஆதரவாக 241 ஓட்டுகளும், எதிராக 190 ஓட்டுகளும் பதிவாகின. இதனால் அந்த 2 மசோதாக்களும் பிரதிநிதிகள் சபையில் வெற்றி  கரமாக நிறைவேறியது.இருந்த போதிலும் தற்போது செனட் சபையில் குடியரசு உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அங்கு இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம் என தெரிகிறது. ஒருவேளை செனட் சபையிலும் அந்த மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டால் ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அவை அனுப்பிவைக்கப்படும். அமெரிக்க-மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்காத எந்த தீர்மானத்தையும் ஏற்கமாட்டேன் என ஏற்கனவே டிரம்ப் தெரிவித்துள்ளார். எனவே இந்த செலவின மசோதாக்கள் 2 சபைகளிலும் நிறைவேறினாலும் கூட தனக்குரிய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் அவற்றை ரத்து செய்துவிடுவார் என தெரிகிறது. இதனால் அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருவது கேள்விக்குறியாகவே உள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து