சிட்னியில் 4-வது டெஸ்ட் போட்டி: 31 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் "பாலோஆன்" - 300 ரன்களில் ஆல்அவுட்டான ஆஸி. அணி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      விளையாட்டு
follow on Aus team 2019 01 06

சிட்னி : சிட்னியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்னில் ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் ஆட்டத்தின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருக்கும் போது மழை குறுக்கிட்டது. இதனால் 3-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்னுடனும், கம்மின்ஸ் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழையால் நேற்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. அதன்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 25 ரன்னிலேயே ஷமி பந்தில் கிளீன் போல்டானார். ஹேண்ட்ஸ்காம்ப் 37 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறி கொடுத்தார். அடுத்து வந்த நாதன் லயன் ரன் ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் ஆட்டமிழக்கும் போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலியா 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடிவிற்கு வந்தது. ஸ்டார்க் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது. இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.  இந்தியாவை விட ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து