உலக வங்கி தலைவர் ஜிம்யாங் கிம் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      உலகம்
Jim Yong Kim 2019 01 08

வாஷிங்டன் : உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜனவரி மாத இறுதியுடன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கிம் அறிவித்துள்ளார்.

உலக வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம்யாங் கிம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு இந்தப் பொறுப்புக்கு வந்த ஜிம்மின் பதவிக் காலம் 2016-ம் ஆண்டு முடிவடைந்தது. இதையடுத்து, 2-வது முறையாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் ஜிம் யாங் கிம் முன்னிறுத்தப்பட்டார். அப்பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், 2-வது முறையாக அவரே தேர்வு செய்யப்பட்டார்.

2022-ம் ஆண்டு பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்த மாத இறுதியுடன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜிம் யாங் கிம் அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் குறித்து, உலக வங்கி ஊழியர்களுக்கு ஜிம் கடிதம் அனுப்பியுள்ளார். ஜிம் பதவி விலகியுள்ளதன் மூலம், அதிபர் டிரம்ப் தனது விருப்பப்பட்ட நபரை உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜிம் பதவி விலகுவதை அடுத்து, உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான கிறிஸ்டாலினா ஜார்ஜிவியா பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து