விஷாலுக்கு எதிராக சிம்பு ஐகோர்ட்டில் வழக்கு

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      சினிமா
Simbu-Vishal 2019 01 08

சென்னை : தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுடனான சம்பள பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று கோரி நடிகர் சிம்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இப்படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்தது. அதையடுத்து ஒரு கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். பின்னர் சிம்பு மீது நடிகர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்தார். மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு செய்தி பரப்பியதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு வழக்கு தொடர்ந்துள்ளார். மைக்கேல் ராயப்பனுக்கும் தனக்கும் இடையேயான பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோர் கட்டப்பாஞ்சாயத்தில் ஈடுபட தடை விதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்த போது, சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும், புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிட கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் சிம்பு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் விஷால், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை இம்மாதம் 18-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து