முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

77 ஆயிரம் கிராமப்புற ஏழை பெண்களுக்கு தலா 50 விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம் - முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஏழ்மை நிலையில் உள்ள 77 ஆயிரம் கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு, தலா ஒரு பயனாளிக்கு 50 விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 பெண் பயனாளிகளுக்கு நாட்டுக் கோழிகள் மற்றும் கூண்டுகளை வழங்கி துவக்கி வைத்தார்.

பெருமளவில் வெற்றி

தமிழ்நாட்டில் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதால், புழக்கடை கோழி வளர்ப்புத் தொழில் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. எனவே, புழக்கடை கோழி வளர்ப்பை மேலும் ஊக்குவிக்க சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் பெண் பயனாளிகளுக்கு, தலா 50 கோழிகள் 25 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 6.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தார்.

திட்டம் துவக்கம்...

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 25 கோடி ரூபாயை 50 கோடி ரூபாயாக உயர்த்தி ஆணை பிறப்பித்தது. அதன்படி, கிராமப்புற ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில், கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 77,000 கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு, தலா ஒரு பயனாளிக்கு 50 விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக் கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 5 பெண் பயனாளிகளுக்கு நாட்டுக் கோழிகள் மற்றும் கூண்டுகளை வழங்கி துவக்கி வைத்தார்.

எளிமையாகிறது...

அப்போது, முதலமைச்சர், அப்பெண் பயனாளிகளிடம், அரசால் வழங்கப்படும் இக்கோழிகளை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று அறிவுத்தினார். இத்திட்டத்தினை நிறைவேற்றிட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் அருகாமையில் உள்ள 4 அல்லது 5 கிராமங்களில் உள்ள பயனாளிகள் ஒரு குழுவாக அமைக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அருகருகே உள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைப்பதால் அக்குழுவிற்கு தேவையான தீவனம் போன்ற பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், கோழி வளர்ப்பின் மூலம் பெறப்படும் பொருட்களைச் சந்தைப்படுத்துவதும் எளிமையாகிறது.

தொழில் முனைவோரை...

ஒரு பயனாளிக்கு நான்கு வார வயதுடைய 50 எண்ணிக்கை அசில் இன கோழிகள், சேவல் மற்றும் பெட்டை சரிவிகிதத்தில் வழங்கப்படுவதால், அடுத்த 16 வாரத்தில் 20 சேவல்களை விற்று வருவாய் ஈட்டலாம். மீதமுள்ள 25 பெட்டை மற்றும் 5 சேவல்களை பராமரிப்பதன் மூலம், இனப்பெருக்கத்திற்கு உகந்த முட்டைகளை உற்பத்தி செய்து, அதன்மூலம் அதிக கோழிகளை உற்பத்தி செய்து, நிலையான வாழ்வாதாரத்தை பெற வாய்ப்புகள் உருவாக்கப்படும். இத்திட்டம் கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கி, தனி நபர் வருமானத்தை பெருக்கி, கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் அ.ஞானசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து