முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பாண்ட்யா - லோகேஷ் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்க பரிந்துரை - பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு தலைவர் பேட்டி

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததன் விளைவாக ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடையை எதிர்நோக்கியுள்ளனர். இதற்கான பரிந்துரையை பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் செய்துள்ளார்.

காபி வித் கரண்....

இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சமீபத்தில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் தொகுப்பாளரின் கேள்விக்கு ஹர்திக் பாண்ட்யாவும், லோகேஷ் ராகுலும் ஜாலியாக பதில் அளித்தனர். அப்போது பெண்களுடனான தங்களது செக்ஸ் பழக்கம் குறித்து வெளிப்படையாக கூறிய சில வி‌ஷயங்கள் சர்ச்சையாக கிளம்பி இருக்கிறது. அவர்களது கருத்துக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பி.சி.சி.ஐ. கண்டனம்

சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் தனது கருத்துக்கு ஹர்திக் பாண்ட்யா மன்னிப்பு கோரியுள்ளார்.

மன்னிப்பு கோரினார்...

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘காபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் தெரிவித்த கருத்துகள் எந்த வகையிலாவது யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த நிகழ்ச்சியின் தன்மைக்கு தகுந்தபடி தான் நான் பதில் அளித்தேன். யாரையும் அவமதிக்க வேண்டும் என்பதோ, யாருடைய மனதையும் காயப்படுத்த வேண்டும் என்பதோ எனது நோக்கமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பி.சி.சி.ஐ. ஆலோசனை...

தெண்டுல்கர், விராட்கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்று கேட்ட கேள்விக்கு விராட்கோலி சிறந்த வீரர் என்று இருவரும் பதில் அளித்ததும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இருவரையும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.  சர்ச்சை எதிரொலியாக கிரிக்கெட்டுக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.

திருப்தியளிக்கவில்லை...

இதற்கிடையே, கிரிக்கெட் வாரியத்தின் நோட்டீசுக்கு பதில் அளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா அதில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இருப்பதுடன், எதிர்காலத்தில் இது போன்று நடக்காதவாறு பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதி அளித்துள்ளார். இப்போது ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் தடைவிதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ, கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டித் தலைவர் வினோத் ராய் பேசுகையில், “ஹர்திக் பாண்ட்யாவின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை. இரண்டு வீரர்களுக்கும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளேன். இருப்பினும், இவ்விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பது பற்றி  பிசிசிஐயின் சட்டக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், டயானா எடுல்ஜிதான் முடிவு எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து