அலகாபாத்தில் நடக்கும் கும்பமேளாவில் ராகுல் காந்தி புனித நீராடுகிறார்

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      இந்தியா
Rahul-Gandhi 2018 10 19

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற உள்ள கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு புனித நீராடுகிறார்.    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.

வருகிற 14-ந்தேதி தொடங்கும் இந்த கும்பமேளா மார்ச் மாதம் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 15 கோடி பேர் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராட இருப்பதால் பா.ஜனதாவும், காங்கிரசும் அவர்களை கவருவதற்காக இப்போதே ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்து அவர்கள் ஆதரவை பெற வியூகம் வகுத்து உள்ளனர். காங்கிரஸ் கட்சி பக்தர்களுக்கு உதவுவதற்காக 1,200 சேவா தள தொண்டர்களை களம் இறங்கி உள்ளது.

பக்தர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் காங்கிரஸ் ஏற்பாடு செய்து வருகிறது. தினமும் 5 ஆயிரம் உதவி பொருட்களை பக்தர்களுக்கு கொடுக்க காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராட உள்ளார். அடுத்த மாதம் (பிப்ரவரி) அவர் கும்பமேளா புனித நீராடலை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் உத்தரபிரதேச வாக்காளர்களை கவர முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து