துரோகம் இழைப்பவர்களை ஏற்க மாட்டோம்: தமிழக மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே எங்கள் ஆதரவு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      தமிழகம்
CM EPS 07-10-2018

சென்னை : கூட்டணிக்கு கூவி கூவி அழைக்கிறார் மு.க.ஸ்டாலின் என்றும், தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குடும்பத்துக்கு தான்...

மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சமுதாயநலக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: -

தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்துக்கு தான் பதவிகள் கொடுத்தார்கள். கருணாநிதி தனது மகள் கனிமொழியை எம்.பி. ஆக்கினார். தயாநிதி மாறன், மு.க.அழகிரியை மத்திய அமைச்சராக்கினார். இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதி வரப்போகிறார். தி.மு.க.வில் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தான் பதவி கிடைக்கும். ஆனால் அ. தி.மு.க.வில் அப்படி அல்ல. சாதாரண தொண்டனும் உயர்ந்த நிலையை எட்ட முடியும். தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆளும் கட்சிகள் எத்தனையோ உள்ளன. ஆளும் கட்சிகளில் சிறந்தது அண்ணா தி.மு.க. தான். மக்களுக்காக தோற்றுவித்த இயக்கம் அ. தி.மு.க.. மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி     அ. தி.மு.க. வழங்கப்படவில்லை...

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். தை பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்க அரசு ஆணையிட்டது. எந்த ஆட்சியிலும் இதுபோன்று வழங்கப்படவில்லை. ஏழை, எளிய மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகை கொண்டாட அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது. மக்களின் தேவை அறிந்து செயல்படும் அரசு அ. தி.மு.க. அரசு. எனவே மக்கள் மத்தியில் செல்வாக்குடன் விளங்குகிறது.

வேடிக்கையானது...

ஸ்டாலின் இப்போது ஊராட்சிகளுக்கு சென்று ஊராட்சி கூட்டம் நடத்துகிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். துணை முதலமைச்சராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் அவர் கிராமங்களுக்கு செல்லவில்லை. இப்போது கிராமம் கிராமமாக செல்கிறார். நாங்கள் எல்லாம் கிராமத்தில் வளர்ந்தவர்கள். எங்களுக்கு கிராமத்தில் உள்ள மக்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியும். இங்கே இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், கே.பி. முனுசாமி, எம்.சி.சம்பத், பாண்டியராஜன் எல்லோரும் கிராமத்தில் உள்ளவர்கள் தான். கிராமத்தை பார்க்காதவர் ஸ்டாலின். அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை நகரத்தில் தான். இன்று அவர் கிராமம் கிராமமாக செல்வது வேடிக்கையானது.

தேவைகளை...

இன்று ஸ்டாலின் பேசுகிறாரே? அவர் அமைச்சர், துணை முதலமைச்சராக இருந்தபோது கிராமத்துக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டியது தானே? இன்று தண்ணீர் கொடுத்தார்களா? மின்சாரம் கொடுத்தார்களா? என்று கேட்கிறாரே? அவரிடம் அன்று அதிகாரம் இருந்ததே? அப்போது இதனை செய்திருக்க வேண்டியது தானே? அப்போது அவர் இதனை செய்திருந்தால் அவர் சிறந்த அரசியல்வாதி. கிராமம் முதல் நகரம் வரை மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் ஒரே ஆட்சி அ. தி.மு.க. ஆட்சி தான்.

மக்களை குழப்புகிறார்...

வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் செயல்படுகிறார். எங்கள் மீது குறை கூறுகிறார். அ.தி.மு.க. அரசு தான் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைத்தது என்று கூறுகிறார். எனவே தான் உள்ளாட்சியில் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார்.உள்ளாட்சி தேர்தலை நடத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் தி.மு.க.வினர் தான் நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள். தடை வாங்கியது தி.மு.க. ஆனால் எங்கள் மீது ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் பரப்பி வருகிறார். மக்களை குழப்புகிறார்.

ஏற்க மாட்டோம்...

இன்றைக்கு கூட்டணிக்கு கூவி, கூவி கட்சிகளை ஸ்டாலின் அழைக்கிறார். கூட்டணி சேர்க்கிறார். தமிழக மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்களோ, அவர்களுடன் தான் எங்களது ஆதரவு. துரோகம் இழைப்பவர்களை ஏற்க மாட்டோம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வகுத்து தந்த பாதையில் செயல்படுவோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து