அ.தி.மு.க.வில் கடின உழைப்பும் விசுவாசமும் இருந்தால் மூன்று முறை முதல்வராகலாம் என்பதற்கு நானே சாட்சி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      தமிழகம்
panneerselvam 2018 11 29

சென்னை : கடின உழைப்பும், தலைமை மீது விசுவாசமும் இருந்தால்,எந்த ஒரு சாதாரணத் தொண்டனும்,தலைமைப் பொறுப்புகளுக்கு வரமுடியும்,முதல்வர் ஆக முடியும், அதுவும், ஒரு முறையல்ல, மூன்று முறை, முதல்வராக முடியும் என்பதற்கு நானே சாட்சி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வட சென்னை வடக்கு, திருவண்ணாமலை வடக்கு, கடலூர் கிழக்கு மாவட்டங்களைச் சார்ந்தமாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை அ.தி.மு.க. அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர் ஒரு படத்திலே கூறுவார்என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலபேர் உண்டு. ஆனால், என்னை நம்பிக் கெட்டவர்கள் இதுவரை யாருமே இல்லை”என்று சொல்லுவார். எம்.ஜி. ஆர்மட்டுமல்ல, அவர் கண்ட இயக்கமும் அது போலத்தான். இந்த இயக்கத்தை நம்பாமல், பிரிந்துசென்று, கெட்டவர்கள் பல பேர் உண்டு. ஆனால், இந்த இயக்கத்தை நம்பி, இயக்கத்தோடு வளர்ந்து, இயக்கத்தோடு உயர்ந்து, இயக்கத்தால் வாழ்ந்தவர்கள் உண்டே தவிர, இயக்கத்தால் வீழ்ந்தவர்கள் என்று எவருமே இல்லை!

நானே சாட்சி...

அ.தி.மு.க.வில் பணம் பெரிதல்ல! பிறந்து வளர்ந்த பரம்பரை பெரிதல்ல, உழைப்பு இருந்தால் போதும்!எம்.ஜி.ஆர் மீது மாறாப் பற்றும் ஜெயலலிதா மீது நீங்காத விசுவாசமும் இருந்தால் போதும்! தான் கொண்ட தலைமை மீதுதளராத நம்பிக்கையும், கடின உழைப்பையும் மட்டுமே தந்து உயருகின்ற இயக்கம் - தொண்டர்களை உயர்த்துகின்ற இயக்கம் அ.தி.மு.க. என்பதை நாடு நன்றாகவே கண்டிருக்கிறது கடின உழைப்பும், தலைமை மீது விசுவாசமும் இருந்தால், எந்த ஒரு சாதாரணத் தொண்டனும், தலைமைப் பொறுப்புகளுக்கு வரமுடியும். முதல்வர் ஆக முடியும். அதுவும், ஒரு முறையல்ல, மூன்று முறை, முதல்வராக முடியும் என்பதற்கு நானே சாட்சி. எந்த ஒரு அடிப்படைத் தொண்டனும் முதல்வராக வந்திட முடியும் என்பதற்கு எடப்பாடி பழனிசாமியே சாட்சி. எந்த ஒரு எளிய தொண்டனும் அமைச்சர் பதவி பெற்றிட முடியும் என்பதற்கு இங்கு அமர்ந்திருக்கும் அமைச்சர்களே சாட்சி.

அ.தி.மு.க.வுக்கு உண்டு....

அ.தி.மு.க. தொண்டர்களை கட்சி என்றுமே கைவிட்டதில்லை. வளமான எதிர்காலம் உங்களுக்கு உண்டு, உழைப்பைத் தந்தால் உயர்வு தானாய் உங்களைத் தேடி வரும் என்று உறுதியோடும், மகிழ்ச்சியோடும், தெரிவித்துக் கொள்கிறேன். காலம் நம் முன்னே பல பணிகளை வைத்திருக்கிறது. 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர் நிற்கிறது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நம்மை எதிர்கொள்ளக் காத்திருக்கிறது. களம் எதுவாயினும், களம் காணும் போர் எதுவாயினும், எதிர்த்து நிற்கும் படை எதுவாயினும், அதனை வெற்றி கொள்கின்ற ஆற்றல், அ.தி.மு.க.வுக்கு உண்டு. எம்.ஜி.ஆரின் அன்பும், ஜெயலலிதாவின் ஆசியும், என்றும் உறுதுணையாக நிற்கும் மக்கள் சக்தியும், அயராத உழைப்பை நல்கும் தொண்டர் சக்தியும், அ.தி.மு.க.வுக்கு வெற்றியை, கட்டாயம் பெற்றுத் தரும். ஒற்றுமையாய்க் களத்தில் நின்று ஓய்வறியா உழைப்பை நல்கி வெற்றிக் கனியை ஈட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து