முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று பொங்கல் பண்டிகை: தமிழர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடிஉள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து - 'வாழ்வில் வளம் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும்'

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொங்கல் திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி...

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருவிழா நன்னாளில் தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த நாள் நமது சமூகத்தின் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவு அளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம். இவ்வாறு மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கவர்னர்

கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்தில், மகிழ்ச்சிகரமான பொங்கல் பண்டிகையையொட்டி இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறுவடைத் திருநாள், கூடுதல் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும், சுபீட்சத்தையும் கொண்டு வரட்டும்’ என்று கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.1,000 பரிசு வழங்கி...

தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலங்களிட்டு, மஞ்சள், கரும்பு, இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, அவ்வரிசி பொங்கும்போது, “பொங்கலோ, பொங்கல்” என்று மங்கல ஒலி எழுப்பி, இறைவனை வணங்கி, பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் இன்புற்று கொண்டாடிட குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மாவின் அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்கி சிறப்பித்துள்ளது.

இப்பொங்கல் திருநாளில், தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து வருமாறு:-

எத்தனையோ விழாக்கள் உண்டு. அவை மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம், ஊருக்கு ஊர் மாறுபடும். வேறுபடும். ஆனால், ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் இருக்கும் ஒரே விழா இதுதான். உயர்வு தாழ்வற்ற சமத்துவ விழா. இலக்கியத்துக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் மண்ணுக்கும் இலக்கணம் வகுத்தவன் தமிழன். மண்ணும், மக்களுமானது தான் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை. உழவே நமது உயிர். மாடுகள் நமது செல்வங்கள். அதனால் தான் மண்ணைக் காப்பதற்கு நாம் போராடுகிறோம். ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறோம். இவர்களை வாழ்த்தும் ஜனநாயகப் போர்க்களம் நம்மை விரைந்து அழைக்கிறது. அதற்கு முன்னதாக உற்சாகத்தை வழங்கும் விழாவாக பொங்கல் திருநாள் வருகிறது.புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டிப் போற்றப்பட்ட தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்:-

அறுவடை திருவிழாவான இந்த பொங்கல் நாளிலே, இறைவனுக்கும், உழைத்தோருக்கும், உழைப்புக்கு பக்கபலமாக இருந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றியை செலுத்தி, நம்முடைய நாடு மேலும் பல வெற்றிகளை அடைய கூடிய வகையில் இறைவன் நமக்கு அருள வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த பொங்கல் விழாவை கொண்டாடுவோம்.

தமிழிசை

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்த பொங்கல் தாமரை மலர் போல், அனைவரும் வாழ்வும் மலர பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த இந்நன்நாளில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ்

அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதற்கேற்ற வகையில் தைத் திருநாளும், தமிழ் புத்தாண்டும் தமிழக மக்களுக்கு அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை பெற்றுத்தர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

தை முதல் பேதங்களும், பிணக்குகளும், மோதல்களும், முரண்பாடுகளும் முழுமையாக மறைந்து, நல்லதே நடந்து, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் உயர வழி பிறந்து, அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்நாடு வளம் பெற இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டி தமிழ் மக்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்., தமிழ் மரபை போற்றி பேணும் நாளாக பொங்கல் விழா ஆண்டுதோறும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருவது தனி சிறப்பு.இயற்கையை வணங்கிய தமிழனின் தொன்மையான வரலாற்றை போற்றி நமது கலாச்சாரமும், நாகரிகமும் என்றும் தொடர, தமிழ் இனத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளிலே உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், உழவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு-

எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நிலத்தரகர் சங்க தலைவர் வி.என். கண்ணன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, தமிழர் தேசிய கழக தலைவர் வேலு. தாஸ் பாண்டியன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் எஸ்.ஜோசப் பெர்னாண்டோ,பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார். அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் , முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்,சமத்துவ மக்கள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.நாராயணன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து