முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தமிழக அமைச்சரவை நாளை ஆலோசனை

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரும் 23, 24 தேதிகளில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து நாளை கூடும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க இருக்கின்றன. ஏற்கனவே அடுத்தடுத்து இரண்டு அமைச்சரவை கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் தலா 16 தொழிற்சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் நாளை நடக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில்,  தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கோரியுள்ள நிறுவனங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுடன், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் நவீன முறையில் விரிவாக்கம் மற்றும் சலுகைகள் கோரி அரசுக்கு விண்ணப்பித்து உள்ளன. அவர்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை முடிந்ததும் நாளை மீண்டும் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளது. மேலும் தமிழக சட்டமன்றத்தில் சமர்பிக்கப்படவிருக்கும் பட்ஜெட் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து