முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு: திருப்பி அனுப்பப்பட்ட பெண்கள் 2 பேர் உண்ணாவிரத போராட்டம்

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலையில் திருப்பி அனுப்பப்பட்ட இளம்பெண்கள் 2 பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.

சபரிமலை கோவிலில் கடந்த 2-ம் தேதி கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண்ணும் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். இதன் பிறகும் சபரிமலை செல்லும் இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்பும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் கண்ணூரை சேர்ந்த ரேஷ்மா, ‌ஷனிலா ஆகிய 2 இளம்பெண்கள் சபரிமலைக்கு சென்ற போது ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்கள் 2 பேரும் ஆண்கள் போல கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்து இருமுடி கட்டுடன் மாலை அணிந்து சென்றனர். அவர்களுடன் 4 ஆண் பக்தர்களும் சென்றனர். நீலிமலை வரை அவர்கள் சென்ற நிலையில் அடையாளம் கண்டறியப்பட்டதால் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடந்தது. போலீசார் அங்கு சென்று ரேஷ்மா, ‌ஷனிலா ஆகிய 2 பேரையும் பாதுகாப்பாக மீட்டு சபரிமலையில் இருந்து கீழே அழைத்து வந்தனர். தற்போது அந்த பெண்கள் 2 பேரும் ரகசிய இடத்தில் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அதே சமயம் அந்த 2 பெண் பக்தர்களும் தாங்கள் சபரிமலைக்கு செல்வதில் தொடர்ந்து உறுதியாக உள்ளனர். அவர்கள் 2 பேரும் தங்களை சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.

இதுபற்றி அவர்கள் கூறும் போது, நாங்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்று 100 நாட்களுக்கு மேலாக விரதம் இருந்து வருகிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த உடனேயே எங்களது விரதத்தை தொடங்கி விட்டோம். விரதம் இருப்பவர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யாமல் மாலையை கழற்றக் கூடாது. எனவே நாங்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யும் வரை மாலையை கழற்ற மாட்டோம். சபரிமலை செல்லாமல் எங்கள் ஊருக்கு திரும்பிச் செல்ல மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர். பெண் பக்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக கேரளாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து