முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த 1000 காளைகள் - கார், தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சீறிப் பாய்ந்த காளைகளை காளையர்கள் ஆக்ரோஷத்துடன் பிடித்தனர்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதற்காக நேற்று முன்தினம் இரவே காளைகள் அலங்காநல்லூரில் குவிய தொடங்கின. நேற்று காலை காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. வீரர்கள் காயமடையாமல் இருக்க வாடிவாசல் முன்புள்ள திடலில் தென்னை நார் கழிவுகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு கலெக்டர் நடராஜன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொடியசைத்து ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார்.

முதலில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு மேலும் சில கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து போட்டிக்காக பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் பாய்ந்து சென்று பிடித்தனர். நேற்று மாலை வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கின. திமில்களை பிடிக்க வந்த காளையர்களை சில காளைகள் திணறடித்தன. தன் மீது பாய்ந்த வீரரை தூக்கியடித்து பந்தாடிய காளை திடலை வேகமாக தாண்டி தனது உரிமையாளருக்கு பரிசை பெற்றுக் கொடுத்தது. சில காளைகள் வீரர்களை அருகே நெருங்க விடாமல் களத்தில் நின்று விளையாடின. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின்  உரிமையாளர்களுக்கும் கார், தங்கக் காசுகள், பீரோ, கட்டில், வாஷிங் மெஷின், பாத்திரங்கள், வேட்டி, துண்டுகள் என பல்வேறு பரிசுகள் திடலிலேயே உடனுக்குடன் வழங்கப்பட்டன. மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து காளைகள் மட்டுமின்றி காளையர்களும் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இதே போல் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினரும் திரண்டிருந்தனர். அவர்கள் தங்கள் கேமிராவில் ஜல்லிக்கட்டை ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தனர். ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி அளிக்க 30 பேர் கொண்ட குழுவினர் மருத்துவ முகாம் அமைத்திருந்தனர். தென் மண்டல ஐ.ஜி. சண்முக  ராஜேஸ்வரன், மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து