முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் மதுரையில் ரூ.345 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை, மதுரையில் ரூ.345 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.

மதுரையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி மதிப்பில் மதுரை நகர் நவீன மயமாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக ரூ.345 கோடி செலவில் மதுரை நகரை சீர்மிகு நகமாக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிதியில் இருந்து ரூ.153 கோடி செலவில் பெரியார் பஸ்நிலையமும், ஷாப்பிங் காம்ப்ளஸ் பஸ் நிலையமும் இணைக்கப்பட்டு நவீன மயமாக்கப்படுகிறது. மேலும் ரூ.81 கோடி செலவில் ராஜா மில் ரோடு முதல் குருவிகாரன் சாலையில் வைகை ஆற்றங்கரை ரோடு புனரமைக்கப்படுகிறது. ரூ.40 கோடி செலவில் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள பழைய சென்டல் மார்க்கெட் பகுதி நவீன வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், புராதான அங்காடி மையம், சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம் அங்கு அமைக்கப்படுகிறது. மேலும் பெரியார் பஸ்நிலையம் ரூ.2.5 கோடி செலவில் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம் அமைக்கப்படுகிறது. புராதான சின்னங்களை இணைக்கும் புராதான வழித்தடம் ரூ.22 கோடியிலும், ஜான்சிராணி பூங்கா அருகே சுற்றுலா பயணிகளுக்கான வருகை மையம் மற்றும் அங்காடி மையம் ரூ.4 கோடியிலும், குன்னத்தூர் சத்திரத்திலும் ரூ.8 கோடி செலவில் வணிக வளாகம், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் சீரமைக்கப்படும். திருமலை நாயக்கர் மகாலை சுற்றியுள்ள பணிகள் ரூ.12 கோடியில் மேம்படுத்தப்படும்.

இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா பெரியார் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் கே.ராஜூ தலைமையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கான அடிக்கலை நாட்டி துவக்கி வைத்தார். இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். கோபாலகிருஷ்ணன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னிலை உரையாற்றினார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், கே.மாணிக்கம் , பி.நீதிபதி, பி.பெரிய புள்ளான், நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ், நகரப்பொறியாளர் அரசு, துணை ஆணையாளர் ப.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் எஸ்.நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ்சேகர் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட நிர்வாகம் வருவாய்த் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம் முன்னோடி வங்கியின் சார்பில் 904 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
அன்பு கொண்ட உள்ளத்தால் தமிழக மக்களை அரவணைத்து நாளெல்லாம் உழைத்து நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்பயன் சேர்த்து இந்தியத் திருநாட்டின் உச்சிக்கு தமிழ் திருநாட்டை உயர்த்திப் புகழ் படைத்த அம்மாவை வணங்கி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை சீர்மிகு நகரம் ஆக்கிட சீரிய திட்டப் பணிகளுக்கு இன்று (நேற்று) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மதுரை மாநகரம் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையும் புகழும் வாய்ந்த தொன்மையான நகரமாகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மாநகரம், மல்லிகை மாநகர், கூடல்நகர், மதுரையம்பதி, தூங்காநகரம், கோவில் நகரம், ஆலவாய் என்று பல்வேறு பெயர்கள் பெற்று பெருமை படைத்த நகரமாகும். பாண்டிய மாமன்னர்களின் தலைநகராக விளங்கிய மதுரை மாநகர், பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்ட நகரம். பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து வளர்ந்து ஆட்சி செய்து,அனுதினமும் அருள்பாலிக்கும் திருநகரமாகும் நமது மதுரை மாநகர்.

தடைகளைத் தகர்த்து, தமிழர்களின் தன்னுரிமையை மீட்டு வெற்றி கொண்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, வீரமும் வெற்றியும் கொப்பளிக்க, ஒரு சில தினங்களுக்கு முன்னர் புகழ்மிகு அலங்காநல்லூரில் நடத்தப்பட்டு தமிழர்களின் வீரத்தை தொடர்ந்து உலக்கு பறைசாற்றிடும் பெருமை கொண்டது மதுரை மாநகரம். இவை அனைத்துக்கும் மேலாக, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,அம்மா ஆகிய இரு பெரும் தலைவர்களின் இதயங்களில் தனியிடத்தைப் பெற்ற மாநகரம், மதுரை மாநகரம்.  மதுரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள பந்தம். தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவைப் போன்ற பந்தமாகும். 1980 ஆம் ஆண்டு, எதிரிகளின் சதியால் அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடந்த போது, எம்.ஜி.ஆர்.தேர்ந்தெடுத்த தொகுதி மதுரை மேற்கு தொகுதியாகும். அந்த தேர்தலில் எம்.ஜி.ஆரை மகத்தான வெற்றி பெற செய்து அவரை மீண்டும் முதலமைச்சராக்கி அழகு பார்த்தவர்கள் மதுரை மக்கள்.

எம்.ஜி.ஆர். எந்த அரசியல் முடிவு எடுப்பதாக இருந்தாலும் மதுரையை மையமாக வைத்துத்தான் எடுப்பார். அந்த முடிவு, தமிழகம் முழுமையும் எதிரொலிக்கும். அதேபோல, மதுரையோடு பிரிக்க முடியாத பாசப் பிணைப்பை அம்மா  கொண்டிருந்தார்கள். அம்மா அவர்கள் மீது கொண்டிருந்த அன்பால், லட்சக் கணக்கில் திரண்டு பொதுக் கூட்டத்தை மாநாடு போல் ஆக்கி, 2011 ஆம் ஆண்டிலும், தொடர்ந்து 2016 ஆம் ஆண்டிலும், அம்மா அவர்களை மகத்தான வெற்றி பெறத் செய்தவர்கள் மதுரை மக்கள். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட மதுரை மாநகரில் நடைபெறுகின்ற இவ்விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

ஸ்மார்ட்சிட்டி சீர்மிகு நகரம் என்பது மனிதர்கள் தாங்கள் வாழ்ந்திட எதிர்பார்க்கும் வசதிகளை விட, அதற்கும் மேலான, மேம்படுத்தப்பட்ட தேவையான எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும் வகையில், அவர்கள் வாழுகின்ற நகரங்களில் அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தருகின்ற திட்டம் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்களில் போதுமான குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம், சுகாதாரம், திறன் மிக்க பொதுப் போக்குவரத்து, ஏழைகளுக்கு வீட்டு வசதி, தகவல் தொடர்பு தொழில் நுட்ப வசதி, மின்னணு நிர்வாகம், டிஜிட்டல்மயமாக்கம், அனைத்துப் பணிகளிலும் மக்கள் பங்கேற்பு, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, கல்வி, மருத்துவ வசதி, மக்களுக்குப் பாதுகாப்பு என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

சீர்மிகு நகரம் திட்டத்தின் அடிப்படைத்த தத்துவம், இயற்கை தந்த வளங்களைப் பாதுகாப்பதும், நகரின் புராதன மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதும் ஆகும். இத்திட்டத்தின் கீழ், நகர விரிவாக்கத் திட்டங்களில் 80 சதவீதம் மின்சக்தியை மிச்சப்படுத்தும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மின்சார உற்பத்தி ஆதாரங்களில் சூரிய மின்சக்தி குறிப்பிட்ட அளவும் இடம் பெற்றிருக்கும். போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் தொழில் நுட்பு உதவியுடன் போக்குவரத்து முறை இயங்கும், பல்லடுக்கு வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு, வீட்டின் அருகே செல்லும் வகையில் வசதி உருவாக்கப்படும். வாழ்வாதாரம் கெடாத வகையில் மாற்று ஏற்பாட்டுன் வழியை அடைந்து நிற்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு இருக்காது. தலைக்கு மேல் கேபிள்கள் தொங்காது. அவை பூமிக்கு அடியில் புதைவடங்களாக கொண்டு செல்லப்படும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படும். அதிகமான விளையாட்டு மைதானங்கள், மிக அதிகமான பூங்காக்கள், உலகத் தரமான நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் ஆகியவை உருவாக்கப்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும்.

புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படும் அவை அமைந்துள்ள பகுதிகள் மேம்படுத்தப்படும் புராதன சின்னங்களை இணைத்திடும் வழித்தடங்கள் அமைக்கப்படும் ஆற்றங்கரைகளும், ஆற்று முகப்புகளும் மேம்படுத்தப்படும். இவ்வகையில் மதுரை மாநகரில் ரூ.356.34 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் சீர்மிகு நகர திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகின்ற இனிய விழாவைத்தான் நாம் இன்று (நேற்று) இங்கு சீரோடும் சிறப்போடும் நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள கிராமங்கள் எல்லாம், நகரங்களைப் போலவே வாய்ப்புகளும், வசதிகளும் பெற்றிட வேண்டும் என்பதும், நகரங்கள் யாவும் மாநகரங்களின் வலிவையும் பொலிவையும் அடைந்திட வேண்டும் என்பதும், மாநகரங்கள் அனைத்தும் உலகப் பெரு நகரங்களுக்கு இணையாக உயர்வும் உன்னதமும் பெற்றிட வேண்டும் என்பதும் அம்மாவின் லட்சியமாகும். இந்த இலட்சியத்தை நிறைவேற்ற நாளெல்லாம் பாடுபட்ட அம்மா அவர்கள், 2015 ஆம் ஆண்டில், மத்திய அரசு இத்திட்டத்தை அறிவித்த நேரத்தில் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு முழுமையாய் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்கள்.

ஒரு நகருக்கான சீர்மிகு நகரப் பணிகளை மேற்கொள்ள, 500 கோடி ரூபாயை மைய அரசு தரும், இன்னொரு 500 கோடி ருபாயை மாநில அரசு தர வேண்டும் என்று மைய அரசு சொன்ன நேரத்தில் அம்மா அவர்கள், இதற்கான நிதி ஆதாரத்தை நாம் உடனடியாக ஏற்படுத்தித் தருவோம் என்று கூறி திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த ஆணையிட்டார்கள். ஸ்மாhட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த அம்மா மேற்கொண்ட ஸ்மார்ட்டான நடவடிக்கைகளால் நாடு முழுவதும் 32 மாநிலங்களில் மைய அரசு தேர்வு செய்த 100 நகரங்களில் 13 நகரங்களை தமிழகத்திற்குப் பெற்று தந்து, இந்தியாவிலேயே ஸ்மார்ட்டான மாநிலம் தமிழகம் என்ற பெயரை அம்மா பெற்றுத் தந்தார்கள்.

இந்த 13 சீர்மிகு நகரங்களிலும் ஒவ்வொரு நகரிலும் 1000 கோடி ரூபாய்க்கு குறைவில்லாத பணிகள் மேற்கொள்ளப்படும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு அம்மா  அரசால் செயலாக்கம் பெற உள்ளன என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த வகையில் மதுரை மாநகரில் அம்மாவின் கனவுத் திட்டங்களை நிறைவேற்ற  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  தலைமையிலான அம்மாவின் அரசு 1020 கோடி ரூபாய்க்கு விரிவான திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதில் 356.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு இன்று (நேற்று) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  இன்றைக்கு அடிக்கல் நாட்டப்படும் பணிகள் அனைத்தையும் 18 மாத காலங்களில் முடித்து, மதுரை மாநகர மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்தவுடன், மதுரை மாநகரம் மேலும் புதுப்பொலிவு பெற்று, இப்பகுதி மக்களுக்கும், இப்பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பேரூதவியாக அமையும் என்று நாம் உறுதியாக நம்புகிறேன்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், 159.70 கோடி மதிப்பீட்டில், பெரியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளவிருக்கும் மறுசீரமைப்பு பணிகளின் பயனாக அதிக பேருந்துகள் நிறுத்துவதற்கும், 371 கார்கள் நிறுத்தவும், 4865 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் வழிவகை ஏற்படும். மேலும், பயணியர் வசதிக்கென மின் தூக்கி, மின்படிக்கட்டுகள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதும் மகிழ்ச்சிக்குரியதாகும். வைகை ஆற்றின் இருபுறங்களிலும் ரூ.81.41 கோடி திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் முகப்பு மேம்பாட்டுப் பணிகள், மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரூ.40.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் பல்லடுக்கு வாகன நிறுத்தகம், ரூ.72.39 கோடி மதிப்பீட்டில் புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளை மேம்படுத்தும் திட்டம், சுற்றுலா பயணிகள் வசதிக்கென பெரியார் பேருந்து நிலையம் அருகே 17033 சதுர அடி பரப்பில் ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் கட்டப் படவிருக்கும் சுற்றுலா பயணிகள் மையம் ஆகிய திட்டப் பணிகள் மதுரை மாநகரின் பெருமைக்கு மேலும் மெருகூட்டுவதாக அமைய இருக்கின்றன.

சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் இன்றைய தினம் ரூ.356.34 கோடிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மதுரை மாநகர மக்கள் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பணிகளை முடித்திட திட்டமிடப்பட்டுள்ள 18 மாத காலங்களுக்கு முன்னரே, அவற்றை நிறைவு செய்து, மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மதுரை மாநகராட்சி அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் பேராராவையும் தர வேண்டும் என்றும், அம்மா அரசுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து