முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் 2-வது சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் 2 நாள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் 2-வது சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

துவக்கி வைத்தார்...

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2-வது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், தென்கொரியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களின் செயல் அதிகாரிகள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு தமிழக அரசு மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

புதிய சாதனை...

பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ல் முதலீட்டு திட்டங்கள் மற்றும் பிரதிநிதிகள் பதிவு ஆகியவை நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆயத்த பணிகளை நாங்கள் துவங்கியதில் இருந்து கடந்த ஓராண்டில் புதிய முதலீட்டு திட்டங்கள் வந்த வண்ணம் இருந்தன. தமிழக தொழில்துறை வரலாற்றில் இது மிக முக்கியமான தருணம் ஆகும். முதலீட்டு துறையில் நாங்கள் புதிய சாதனையை படைத்திருக்கிறோம். 2015 செப்டம்பரில், ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையில் செயல்பட்ட தமிழக அரசு முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு 2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தது. இந்த திட்டங்கள் 3 முதல் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும்.

தொழில் மயமாக்கலில்...

நாங்கள் தீவிரமாகவும் தொடர்ந்தும் கண்காணிப்பதன் மூலம் பல்வேறு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளதோடு, பல திட்டங்கள் துவக்கும் சூழ்நிலையை எட்டியுள்ளது. 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியை தொடர்ந்து ஜெயலலிதா அரசு தற்போது 2-வது மாநாட்டை நடத்துகிறது. இதற்கு கிடைத்த வரவேற்பில் இருந்து இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பது மட்டுமல்லாமல், தமிழக வருடாந்திர தொழில் மயமாக்கலில் வரலாற்று சிறப்புமிக்க நினைவு கூரத்தக்க வகையில் இருக்கும்.

2-வது மாநிலம்....

கடந்த 30 ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களுக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதிலும் வலுவான முறையில் வளர்ச்சி அடைவதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய நிரந்தர பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி விகிதத்தில் 8.4 சதவீதத்தை தமிழகம் எட்டியுள்ளது. 1992-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தொழில் கொள்கை காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் புரட்சி ஏற்பட்டது. போர்டு, ஹுண்டாய் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆட்டோமொபைல் துறையில் உலகத்திலேயே மிகப் பெரிய மையமாக சென்னை உருவெடுத்துள்ளது.

2003 - 2004-ம் ஆண்டில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த மிகப் பெரிய எலக்ட்ரானிக் தொழிற்சாலையும் இல்லை. 2003-ம் ஆண்டில் கொண்டு வந்த தொழில் கொள்கை காரணமாக எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை துறையில் தமிழகம் உலக அளவிலான முக்கிய நிறுவனங்களை கவர்ந்து ஒரு மகத்தான புரட்சியை கண்டது. ஸ்ரீபெரும்புதூரில் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கான உதிரி பாகங்களை அசெம்பிள் செய்யும் பாக்ஸ்கான் முதலீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மின் துறையில் புரட்சி

ஜெயலலிதாவின் செயல்பாடு காரணமாக 2011-ம் ஆண்டு எரிசக்தி துறையில் பெரிய அளவு பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்த நிலையில் அவரது நடவடிக்கை காரணமாக எரிசக்தி துறையில் உபரி மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் தமிழக மின்துறை ஒரு புரட்சியை செய்துள்ளது. தற்போது மின் பற்றாக்குறையே இல்லாத மாநிலமாகவும் மின் மிகை மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது.

வறுமை ஒழிப்பு...

இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரியை விட வறுமையை மிக வேகமாக ஒழித்த ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மாநிலத்தின் மனித வளர்ச்சி குறியீடானது இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. தேசிய சராசரியில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் சுகாதாரம், கல்வி, ஊட்டசத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், மாற்றுத் திறனாளிகள் நலன், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலன், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட சமூக நலத்துறையில் அதிக அளவில் செலவிடப்பட்டதே ஆகும்.

வெளிநாட்டு முதலீடுகள்

நாட்டிலேயே தற்போது சிறந்த கல்வியும் திறமையும் உடைய பணியாளர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கல்வியும் மேம்பாடும் இணைந்த குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் 48.60 சதவீதத்துடன் தமிழகம் உயர்ந்த இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 7.2 கோடி மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள் அதில் 50 சதவீதம் பேர் நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள். உற்பத்தி மற்றும் சேவை துறையில் வலுவான செயல்பாட்டிலும் புதுமையான பொருளாதார அடிப்படையிலும் தமிழகம் சிறப்பாக உள்ளது. உயர்ந்த தரமான திறமை உடைய மனித வளம் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழகம் முதலீட்டை ஈர்க்கும் மையமாக விளங்குகிறது.

தமிழகம் முன்னணியில்...

நாட்டிலேயே வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் ப்ரோஸ்ட் அன்ட் சுலிவன் மற்றும் என்.சி.ஏ.இ.ஆர். ஆகிய சர்வதேச ஆலோசனை நிறுவனங்கள் முதலீட்டு வாய்ப்பு உள்ள முன்னணி மாநிலமாக தமிழகத்தை பட்டியலிட்டுள்ளது. ஜவுளி, தோல், ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், கனரக மற்றும் இலகுரக என்ஜினியரிங், எலக்ட்ரானிக் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள், மருத்துவம் உள்ளிட்ட தொழில்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

புதிய கொள்கைகள்

சுற்றுச்சூழல், சுற்றுலா கொள்கை, வன கொள்கை, இளைஞர் நல கொள்கை, உணவு பதப்படுத்தல் கொள்கை, மின்னணு நிர்வாகம் மற்றும் ஐசிடி கொள்கை உள்ளிட்டமுக்கிய வளர்ச்சி துறைகள் தொடர்பாக விரிவான கொள்கையையும் நாங்கள் வகுத்திருக்கிறோம். புதிய தொழில் சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக புதுமையாக புதிய கொள்கைகளை நாங்கள் துவக்கியிருக்கிறோம். ஊக்கத் தொகையுடன் கூடிய புதிய தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மி்ன்சார வாகன கொள்கையை துவக்க இருக்கிறோம். பாதுகாப்பு துறை அமைச்சர் வானூர்தி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி கொள்கையை இப்போது துவக்கி வைத்துள்ளார்.

ஆட்டோமொபைல் உற்பத்தி

வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி துறையை ஊக்குவிக்க எங்களது அரசு ஸ்ரீபெரும்புதூரில் பிரத்யேகமாக 250 ஏக்கரில் அமைத்திருந்த வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பூங்காவை 700 ஏக்கராக விரிவாக்கம் செய்துள்ளது. இதில் ஆட்டோ மொபைல் உற்பத்தி மற்றும் எலெக்ட்ரானிக் மையமும் அடங்கும். அதே போல கோயம்புத்தூரில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கின்றது. அது மட்டுமல்ல, பல்வேறு தொழிற்சாலைகளும் தமிழகத்திற்கு வரவிருக்கின்றன.

அனைத்து துறைகளிலும்...

மிக சமீபத்தில் 2018 நவம்பரில், முக்கிய பத்திரிகையான இந்தியா டூடே, இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது. அந்த ஆய்வு முடிவில் தமிழகம் அனைத்து துறையிலும் ஒட்டுமொத்த செயல்பாட்டில் சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் முதலிடத்திலும், சுற்றுலா துறையில் முதலிடத்திலும், கட்டமைப்பு துறையில் 2-வது இடத்திலும், வளர்ச்சி உள்ளடங்குதலில் 3-வது இடத்திலும், கல்வியில் 3-வது இடத்திலும், தொழில்முனைவில் 3-வது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

ரூ. 2 லட்சம் கோடி முதலீடு

அடுத்த 2 நாட்களில் 5 நாடுகள் பங்கேற்கும் கருத்தரங்குகள் உள்ளிட்ட 25 கருத்தரங்களை நாங்கள் நடத்துகிறோம். பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்றவை நமது ஒத்துழைப்பு நாடுகளாக உள்ளன. அந்த நாடுகளின் அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இலக்காக 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இது ஏற்கனவே இலக்கை எட்டி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகப்பெரிய வாய்ப்பு

நாளை (இன்று) நடைபெறும் சந்திப்பின் போது ஒட்டுமொத்த முதலீடுகள் தொடர்பாகவும், இந்த மாநட்டின் வெற்றி தொடர்பாகவும் நான் அறிவிக்க இருக்கிறேன். தமிழகம் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்காலத்தை எதிர்நோக்கி உள்ளது. தமிழகத்துடன் இணைந்து தொழில் துவங்க உள்ள உங்களை எல்லாம் வாழ்த்துவதோடு, மிகப்பெரிய வாய்ப்பு நிறைந்த இந்த மாநிலத்தில் உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயல்படும். இந்த நாட்டையும், மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பங்கேற்பாளர்களாகவும், அதை செயல்படுத்தும் மாநிலமாகவும் நாம் விளங்குகிறோம். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்துள்ள உங்களை எனது சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் மீண்டும் ஒருமுறை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து