முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

நேப்பியர் : நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்து பயணம்

ஆஸ்திரேயாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த இந்திய கிரிக்கெட் அணி அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் நேப்பியரில் நேற்றுநடைபெற்றது. இந்த போட்டி உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் இது என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸ்சன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

இந்திய அணி

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ் டோனி, கேதர் ஜாதவ், அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், புவனேஷ்குமார், முகம்மது சமி.

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியால் இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு வெற்றி பெற 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆட்டம் பாதிப்பு...

இதனை அடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாடினர். ஆனால் இந்திய அணியினர் சூரிய ஒளியால் பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். இதனால் ஆட்டம் அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 49 ஓவர்கள் வரை பந்து வீச முடிவானது. வெற்றி இலக்கு 156 ஆக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா முன்னிலை...

இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் (11) ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் தவான் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ரோகித் ஆட்டமிழந்த பின்னர் விளையாடிய கோலி (45) ரன்கள் எடுத்து பெர்குசன் பந்தில் விக்கெட் கீப்பர் லாத்தமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராயுடு (13) ரன்களுடன் ஆட்டமிழக்கவில்லை. இந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டி அரை மணி நேரம் பாதிப்பு

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து இருந்தது. தவான் 29 ரன்களிலும், விராட் கோலி 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர். அப்போது, சூரிய ஒளியால் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். இதையடுத்து, உடனடியாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆட்டம் நிறுத்தப்பட்டது குறித்து விளக்கம் அளித்த கள நடுவர் ஷான் ஹைக், “மறையும் போது சூரிய ஒளி பேட்ஸ்மேன்களில் கண்களை நேரடியாக தாக்கியது. எனவே, வீரர்களின் பாதுகாப்பு கருதி, சூழல் சரியாகும் வரை போட்டியை நிறுத்தி வைத்துள்ளோம். கிரிக்கெட் களத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெற்று இருப்பது எனது 14 ஆண்டு கால அனுபவத்தில் இதுதான் முதல் முறை” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து