முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்திட இடம் தேர்வு செய்திடும் பணிகள்: மாவட்ட முதன்மை நீதிபதி நசீமாபானு ஆய்வு

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்திடுவதற்கான இடத்தை தேர்வு செய்திடுவது குறித்து மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி.நசீமாபானு  ஆய்வு மேற்கொண்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
திருமங்கலம் நகரில் செயல்பட்டு வரும் நீதிமன்றம் நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிறப்பு மிக்க ஒன்றாக திகழ்கிறது.தற்போது சார்பு நீதிமன்றம்,நீதித்துறை நடுவர் நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலும் கிளைச் சிறைக்கு அருகிலும் செயல்பட்டு வருகிறது.தற்போது இந்த நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததாலும்,வழக்குகளில் ஆஜராகிடும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதாலும் மேற்கண்ட நீதிமன்றங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து நீதிமன்றங்களுக்கு வருகை தந்திடும் பொதுமக்களின் வசதிக்காகவும்,வழக்குகளில் ஆஜராகிடும் வழக்கறிஞர்களின் சிரமங்களை தவிர்த்திடும் வகையிலும் மேற்கண்ட நீதிமன்றங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்துதந்திட வேண்டும் என திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத்தினர்,சங்கத்தலைவர் சி.ராமசாமி தலைமையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர் வசதிக்காக திருமங்கலம் நகரிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஒன்றாக இணைத்து புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்திட ஏதுவாக திருமங்கலம் நகரில் செயல்பட்டு வரும் நீதிமன்ற வளாகம் மற்றும் சில இடங்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கப்பலூர் பகுதியிலுள்ள திருமங்கலம் அரசு கல்லூரி அருகே 3.46ஏக்கர் பரப்பளவு கொண்ட காலியிடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்காக பரிசீலனை செய்யப்பட்டது.இந்நிலையில் திருமங்கலம் அரசு கல்லூரி அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்திடுவதற்காக பரிசீலனையில் உள்ள இடத்தினை மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி.நசீமாபானு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் தலைமை குற்றவில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, திருமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன்,முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஸ்ரீவித்யா,கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பர்ஷாத்பேகம்,நீதித்துறை நடுவர் பாரதி  மற்றும் திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் சி.ராமசாமி,செயலாளர் அறிவொளி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.இதனை தொடர்ந்து திருமங்கலம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்திடும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதால் வழக்கறிஞர்களும்,பொதுமக்களும் மகிழச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து