முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் ரூ.1,264 கோடியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார் - விழாவில் முதல்வர் இ.பி.எஸ். - துணை முதல்வர் ஓ.பி.எஸ். பங்கேற்பு

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : மதுரையில் ரூ.1,264 கோடியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று

அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் தமிழக கவர்னர், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

டெல்லியில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்தது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இறுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அடிக்கல்

இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

முதல்வர் பங்கேற்பு

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இதே விழாவில் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பிரதமர் வருகை...

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு பகல் 11.20 மணிக்கு விமானம் மதுரை வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பிரதமர் மோடி, 3 கி.மீ. தொலைவில் உள்ள மண்டேலா நகர் செல்கிறார். பின்னர் விழாவில் பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கொச்சி செல்கிறார்

அதை தொடர்ந்து அரசு விழா நடைபெறும் இடத்தின் அருகே நடைபெறும் பா.ஜ.க. மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் பிரதமர் மோடி பேசுகிறார். அதன் பிறகு பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.

பாதுகாப்பு தீவிரம்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் முதல் விழா திடல் வரையிலான பகுதிகளை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அமைச்சர்கள் ஆய்வு

விழா நடைபெறும் திடலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மதுரை கலெக்டர் நடராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விமானம் பறக்க தடை

பா.ஜ.க. மாநாட்டு ஏற்பாடுகளை கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர். தேசிய பாதுகாப்பு படை ஐ.ஜி. குப்தா தலைமையிலான குழுவினர் மதுரை வந்து பிரதமர் மோடி பங்கேற்க உள்ள விழா திடல்களை ஆய்வு செய்தனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பிரதமர் நிகழ்ச்சி முடியும் வரை அந்தப்பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ்-ன் சிறப்புகள்

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், 100 எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடங்களும், 60 பி.எஸ்.சி நர்சிங் படிப்பிற்கான இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன. இது, தமிழகத்தில் மருத்துவ கனவோடு இருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக அமையும். பல்நோக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 15 முதல் 20 புதிய துறைகள் இடம் பெற உள்ளன. மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதால், இதன் மூலம் அதிக உள்நோயாளிகள் பயன் பெற முடியும். இந்த மருத்துவமனை அமைவதன் மூலமாக, நாள்தோறும் ஆயிரத்து 500 புறநோயாளிகளும், மாதத்திற்கு ஆயிரம் உள்நோயாளிகளும் பயன் பெற முடியும். மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், மருத்துவர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட பல வசதிகளோடு கட்டப்படவுள்ளது இந்த எய்ம்ஸ் மருத்துவ வளாகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து