முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை பெரியார் பஸ் நிலையம் இன்று மூடல் 9 இடங்களில் பஸ்களை நிறுத்த மாற்று ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை பெரியார் பஸ் நிலையம் இன்று மூடப்படுகிறது. பஸ்களை நிறுத்துவதற்கு 9 மாற்று இடங்களை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பஸ் நிலையம் ரூ. 156 கோடி செலவில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்படுகிறது. அதற்காக பெரியார் பஸ் நிலையம், காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம் ஆகியவை இணைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்காக பெரியார் பஸ் நிலையம் இன்று முதல் மூடப்படுகிறது. எனவே மாற்று இடங்களில் பஸ்களை நிறுத்த போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதற்காக 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பரங்குன்றம், திருமங்கலம் வழியாக செல்லக் கூடிய பஸ்கள் கே.பி.எஸ். ஓட்டல், டி.பி.கே. சாலையில் நிறுத்தப்படும். தெப்பக்குளம், திருப்புவனம் செல்லக் கூடிய பஸ்கள் டி.பி.கே. சாலை கிரைம் பிராஞ்ச் அருகில் நிறுத்தப்படும். சிந்தாமணி, வேலம்மாள் ஆஸ்பத்திரி, நெடுங்குளம் வழியாக செல்லக் கூடிய பஸ்கள் டி.பி.கே. சாலையின் மத்தியில் நிறுத்தப்படும். அவனியாபுரம், காரியாபட்டி மார்க்கமாக செல்லக் கூடிய பஸ்கள் ஹயாத்கான் தெரு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து புறப்படும்.
அழகர்கோவில், ஊமச்சிகுளம் வழியாக செல்லக்கூடிய பஸ்கள் கோட்டை மற்றும் திண்டுக்கல் ரோடு பகுதியில் இருந்து புறப்படும். ஒத்தக்கடை, திருவாதவூர், மேலூர் பகுதியில் செல்லக் கூடிய பஸ்கள் பாண்டி பஜார் சர்ச், ரயில் நிலையம், மேலவெளி வீதி பகுதிகளில் இருந்து புறப்படும். பாத்திமா கல்லூரி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, விக்கிரமங்கலம் பகுதிகளுக்கு செல்லக் கூடிய பஸ்கள் மகபூப்பாளையம், மதுரை ரயில் நிலையம், மேற்கு நுழைவு வாயிலில் இருந்து கிளம்பும்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், செக்காணூரனி, உசிலம்பட்டி மார்க்கமாக செல்லக் கூடிய பஸ்கள் எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகம் அருகில் இருந்து புறப்படும். மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், அண்ணா மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு செல்லக் கூடிய பஸ்கள் அனைத்தும் மதுரை பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில் இருந்தும், பைபாஸ் ரோடு பகுதிகளில் இருந்தும் புறப்படும்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் சேனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பெரியார் பஸ் நிலையம் மூடப்படுவதால் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மேயர் முத்து பாலத்தில் இருந்து நேரடியாக எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் ஏறுவதற்கு பெரியார் பஸ் நிலையத்திற்குள் ஒதுக்கப்பட்ட இடம் வழியாக சென்று பாலத்தில் ஏற வேண்டும். அதே போல் மேலவெளி வீதிக்கு செல்வதற்கு பெரியார் பஸ் நிலையத்துக்குள் ஒதுக்கப்பட்ட பாதையில் சென்று கட்டபொம்மன் சிலையை அடைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து