முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பிரேசிலியா : பிரேசில் நாட்டில் இரும்புத் தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. 

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. 
இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது. அங்கு தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதுதவிர அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. 

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் சேதமடைந்ததால், அப்பகுதியில் சகதியில் சிக்கிய பொதுமக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பாதுகாப்பு காரணமாக அங்கு வசிக்கும் பலர் வெளியேற்றப்பட்டனர். அருகில் உள்ள மற்றொரு அணையும் மோசமான நிலையில் இருந்ததால், நேற்று முன்தினம்  மீட்பு பணி நிறுத்தப்பட்டது. நேற்று  மீட்பு பணி மீண்டும் தொடங்கியது. 

நேற்று  முன்தினம் நிலவரப்படி இந்த விபத்தில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் மேலும் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 58 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக்குழு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என 305 பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 192 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில், 23 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து